​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மிரள வைத்த காளைகள்... அடக்கி பிடித்த காளையர்கள்

Published : Feb 23, 2020 11:44 AM

மிரள வைத்த காளைகள்... அடக்கி பிடித்த காளையர்கள்

Feb 23, 2020 11:44 AM

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகளுக்கும் காளையர்களுக்கும் இடையேயான மல்லுக்கட்டு களைகட்டியது.

கோவையில் மூன்றாவது ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டி உற்சாகத்துடன் நடைபெற்றது. செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். பல்வேறு ஊர்களைச் சேர்ந்த காளைகள், களத்தில் சீறி பாய்ந்தன. அவற்றை மாடுபிடி வீரர்கள் அடக்கி பிடித்தனர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியில் நடந்த போட்டியில் 450 காளைகளும், 300க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர். போட்டியை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் ஆட்சியர் மெகராஜ் தொடங்கிவைத்தனர்.

திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோனியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது. மணப்பாறை, திருச்சி, சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட காளைகளும் 300க்கும் மேற்பட்ட வீரர்களும் களமாடினர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் கவிநாடு கிராம ஜல்லிக்கட்டு போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழா முன்னிட்டு நடந்த போட்டியில் 850 காளைகளும் 450 மாடுபிடி வீரர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நெடுங்குளம் கிராமத்தில் சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. விருதுநகர், மதுரை, தேனி, கம்பம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, கோயம்புத்தூர் என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 350 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.