​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதியவர்கள் கல்லைப் போட்டுக் கொலை...சைக்கோ கொலைகாரன் கைது

Published : Feb 22, 2020 1:35 PM



முதியவர்கள் கல்லைப் போட்டுக் கொலை...சைக்கோ கொலைகாரன் கைது

Feb 22, 2020 1:35 PM

சேலத்தில் நள்ளிரவு நேரங்களில் 3 முதியவர்களை கல்லால் தாக்கி கொலை செய்து பணம் திருடிய சைக்கோ கொலைகாரனை 20 நாட்களுக்குப் பின் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2-ஆம் தேதி சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் நள்ளிரவில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த பிச்சைக்கார முதியவர் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார்.

அதேபோன்று கடந்த 3-ஆம் தேதி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்த முதியவரும், கடந்த 4-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நிழற்குடை பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த முதியவரும், நள்ளிரவில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டனர்.

கொலை நடந்த இடங்களின் சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது ஒரு நபர் கொலை செய்வதற்காக பெரிய கல்லை தூக்கி வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

சி.சி.டி.வி. காட்சியுடன் ஒத்துப்போன உருவத்தில் இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அந்த நபர் மாறி மாறி தகவல்களை தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. சி.சி.டி.வி. காட்சிகளும் அந்த நபரின் தனி புகைப்படங்களும் பெங்களூரில் உள்ள தடயவியல் சோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டன. இதில் இரண்டும் ஒரே நபர்தான் என தெரியவந்ததையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சித்தேரியூரைச் சேர்ந்த ஆண்டிச்சாமி என்ற அந்த நபர் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டதால் உறவினர்கள் விரட்டியடித்ததும், ஊர் ஊராகத் திரிந்த ஆண்டிச்சாமி இரவு நேரங்களில் பிச்சைக்காரர்களிடம் காசுகளைத் திருடி கஞ்சா வாங்கியதும் தெரியவந்தது. சேலத்தில் பணத்தை திருடியபோது முதியவர்கள் சத்தமிட்டதால் கல்லைப் போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.