​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகா சிவராத்திரி - பக்தர்கள் வழிபாடு..!

Published : Feb 21, 2020 8:03 PM

மகா சிவராத்திரி - பக்தர்கள் வழிபாடு..!

Feb 21, 2020 8:03 PM

மகா சிவராத்திரியையொட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு சிவாலயங்களில், சிறப்பு வழிபாடுகள் உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்றன. 

தஞ்சாவூரில், பெருவுடையார் கோவிலில் உள்ள நந்திக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 32 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மகா சிவராத்திரியோடு, பிரதோஷமும் வந்ததால், தஞ்சாவூர் பெரிய கோவில், பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 2ஆவது நாளாக, சிவாலய ஓட்டம் நடைபெற்றது. திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநத்திக்கரை என 12 சிவாலயங்களை இணைக்கும் இந்த சிவாலய ஓட்டத்தில், தமிழ்நாடு, மற்றும் கேரளாவில் இருந்து, பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, கடல் மட்டத்தில் இருந்து, 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சதுரகிரி மலை மீது உள்ள, சுந்தரமகாலிங்கம் கோவில், மகா சிவராத்திரியையொட்டி, சிறப்பு வழிபாடுகள் களைகட்டியுள்ளன. பகல் முழுவதும், மலையேறி வந்த பக்தர்கள், இரவில் கோவில் வளாகத்தில் தங்கினர்.

புதுச்சேரி காரைக்காலை அடுத்த கோவில்பத்து பகுதியில் உள்ள பார்வதீஸ்வரர் ஆலயத்தில், ஸ்ரீ துர்கா மன்றம் சார்பில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, மகாலட்சுமி பூஜை எனப்படும் திருவிளக்கு பூஜையை முன்னெடுத்தனர்.

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, மேளதாளங்கள் முழங்க, சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.