​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க அதிபர் பயணிக்கும் அதிநவீன Air Force One விமானத்தின் சிறப்புகள்..

Published : Feb 19, 2020 5:27 PM

அமெரிக்க அதிபர் பயணிக்கும் அதிநவீன Air Force One விமானத்தின் சிறப்புகள்..

Feb 19, 2020 5:27 PM

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் இந்தியா வர உள்ளார். அவர் Air Force One ரக விமானத்தில் இந்தியாவிற்கு வர உள்ளார். இந்த விமானத்தின் சிறப்புகள் பற்றி பார்க்கலாம்.

அமெரிக்காவின் அதிபர் பதவியில் இருப்பவர்கள் பிற நாடுகளுக்கு வான்வெளி பயணம் செய்ய பயன்படுத்தும் விமானமே சர்வதேச அளவில் மிக பிரபலமானதாக உள்ளது. இந்த விமானம் அதிகாரப்பூர்வமாக Air Force One என்றழைக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர்கள் எந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தாலும் இந்த ரக விமானத்தையே பயன்படுத்துவர்.

அமெரிக்க அதிபரின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இந்த விமானங்களில் "யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா" என்ற எழுத்தும், அமெரிக்க கொடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் முத்திரை ஆகியவை இடம் பெற்றுள்ளன. Air Force One அதிபருக்கான விமானக் குழுவால் பராமரிக்கப்படுகிறது. விமானி, துணை விமானி தவிர்த்து பொறியாளர் மற்றும் வழிகாட்டி ஆகியோரை உள்ளடக்கிய குழு இந்த விமானத்தை இயக்குகிறது.

image

232 அடி நீளமுள்ள Air Force One விமானத்தின் அகலம் 195 அடிகளாகும். இந்த சிறப்பு மிக்க விமானத்தின் பிரமாண்டத்தை பற்றி கூற வேண்டுமென்றால், 6 மாடிகளை கொண்ட கட்டிடத்திற்கு ஒப்பாக சொல்லலாம். அமெரிக்க அதிபரின் இந்த தனித்துவ மிக்க விமானத்திற்குள் 3 தளங்கள் உள்ளன.

4,000 சதுரஅடி பரப்பளவுள்ள Boeing 747-200 B விமானம் தான், Air Force One விமானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் கருத்தரங்க அறை, உணவருந்துவதற்கான அறை, ஒரே நேரத்தில் 100 பேருக்கு உணவு தயாரிக்கும் வகையில் 2 உணவு மேடைகள், மருத்துவமனை, செய்தியாளர் சந்திப்பிற்கென பிரத்யேக அறை என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதிபருக்கு சிகிச்சை மேற்கொள்ள தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்ய ஆபரேஷன் தியேட்டர் வசதியும் விமானத்தில் உள்ளது. அவசர காரணங்களுக்காக விமானத்தில் பயணிக்கும் அமெரிக்க அதிபரின் சேமிக்கப்பட்ட ரத்த வகை குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு விமானத்தில் எடுத்து வரப்படும்.

image

அணு ஆயுத தாக்குதல்களை தாங்க வல்லது. விமானத்தினுள் அதிபர் மற்றும் உடன் செல்லும் அதிகாரிகளுக்கென தனி அறைகள் உள்ளது. அதி நவீன தகவல் பரிமாற்ற வசதிகளைக் கொண்டது. விமானத்தில் இருந்து தரைக்கும், பிற விமானங்களுக்கும் தொடர்பு கொள்ள Multi frquency ரேடியோக்கள் உள்ளன. இதில் உள்ள மின்னணு பாதுகாப்பு உபகரணங்கள் எதிரி நாட்டு ரேடார்களை குழப்பி, தாக்குதலில் இருந்து தப்பித்து கொள்ள உதவும்.

ஏவுகணை தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறியும் கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. பறந்து கொண்டிருக்கும் போதே நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியும் இந்த விமானத்தில் உள்ளது. ஒருவேளை அதிபர் நாட்டில் இல்லாத நேரத்தில் அமெரிக்கா மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், Air Force One விமானத்தில் இருந்தபடியே கட்டளைகளை பிறப்பிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவசர காலங்களில் அமெரிக்க அதிபர் பறந்துகொண்டே கட்டளைகளை பிறப்பிக்கும் கட்டுப்பாட்டு அறையாகவும் செயல்படும் Air Force One விமானம்.