​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவுடன் தற்போது வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தில்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப்

Published : Feb 19, 2020 8:58 AM



இந்தியாவுடன் தற்போது வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தில்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப்

Feb 19, 2020 8:58 AM

இந்தியாவுடன் தற்போது அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் வரும் 24, 25ம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த பயணத்தின்போது இருநாடுகள் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க கூட்டுப்படை தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்த பயணத்தின்போது வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட மாட்டாது என்று கூறினார். இந்தியாவுடன் அமெரிக்காவால் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்று கூறிய டிரம்ப், அந்த ஒப்பந்தம் செய்து கொள்வதை தாம் ஒத்தி வைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவிருப்பதை சுட்டிக்காட்டிய டிரம்ப், அந்தத் தேர்தலுக்கு முன்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுமா என்பது தமக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.

அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தக உறவுகளில் தமது அதிருப்தியை வெளிப்படுத்திய டிரம்ப், அமெரிக்காவை உரிய முறையில் இந்தியா நடத்தவில்லை எனவும் கூறினார். அதேநேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமக்கு மிகவும் பிடித்தமானவர் என புகழ்ந்த அவர், இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து அமெரிக்கா சார்பில் ராபர்ட் லைட்தீசர் (Robert Lighthizer) என்பவர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அவர் டிரம்புடன் இந்தியா வர மாட்டார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.