​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மூடும் அபாயத்தில் வோடபோன்..!

Published : Feb 18, 2020 10:59 AM



மூடும் அபாயத்தில் வோடபோன்..!

Feb 18, 2020 10:59 AM

அரசுக்கு செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவைத் தொகையை ஒரே இரவில் செலுத்துமாறு கட்டாயப்படுத்தினால், நிறுவனத்தை இழுத்து மூடுவதைத் தவிர வோடபோனுக்கு வேறு வழி இல்லை என்று அதன் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ((Mukul Rohatgi)) கூறியுள்ளார்.

தொலைத் தொடர்பு சேவையை நடத்துவதற்கான உரிம கட்டணம், அரசின் அலைக்கற்றையை பயன்படுத்துவதற்கான கட்டணம் என்று கோடிக்கணக்கான ரூபாயை ஏர்டெல், வோடபோன், டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் பாக்கி வைத்துள்ளன.

இதை உடனடியாக செலுத்தவில்லை என்றால் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என உச்ச நீதிமன்றம் கடந்த 14 ஆம் தேதி எச்சரித்தது. இதை தொடர்ந்து ஏர்டெல் நேற்று பத்தாயிரம் கோடியும், டாடா டெலிசர்வீசஸ் 2 ஆயிரத்து 197 கோடியும் செலுத்தின.

பாக்கி தொகையை மார்ச் 17 க்குள் செலுத்தி விடுவதாக நீதிமன்றத்தில் அவை உறுதி அளித்துள்ளன. இந்த நிலையில் முதற்கட்டமாக நேற்று 2500 கோடியும், வார இறுதியில் மேலும் ஆயிரம் கோடி ரூபாயும் செலுத்துவதாக வோடபோன் கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய வோடபோன் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, கடந்த 10 ஆண்டுகளில் தங்களது நிறுவனம் 2 லடசம் கோடிக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளதாகத் தெரிவித்தார். நிலுவைத் தொகையை ஒரே இரவில் செலுத்த வற்புறுத்தினால், நிறுவனத்தை மூடும் நிலை ஏற்படும் என்றார் அவர்.

இதனால் நேரடி ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் உள்பட மொத்தம் 50 ஆயிரம் பேர் உடனடியாக வேலையிழப்பை நேரிடுவதுடன் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர் அச்சம் தெரிவித்தார்.

வோடபோன் அளித்துள்ள வங்கி உறுதி பத்திரங்களை, நிலுவையை ஈடுகட்டும் நோக்கில், அரசு அவற்றை பணமாக மாற்றக் கூடாது என்று வேண்டிக் கொண்ட அவர், அப்படி நடந்தால் செவ்வாய் அன்று வோடபோன் மூடும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

வோடபோனின் நிலுவைத் தொகை , வட்டி, அபராத வட்டி எல்லாம் சேர்ந்து சுமார் 25 ஆயிரம் கோடி வரை இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

கடந்த 2018 ல் ஐடியா செல்லுலார் நிறுவனமும் , வோடபோனும் ஒன்றாக இணைந்தன. இதனால் வோடபோன் ஐடியா,பாரதி ஏர்டெல், ஜியோ ஆகிய 3 நிறுவனங்கள் மட்டுமே இப்போது களத்தில் உள்ளன.

இந்த நிலையில் வோடபோன்மூடப்பட்டால், ஏர்டெல், ஜியோவுக்கு இடையேயான நேரடிப் போட்டியாக இந்திய தொலைத்தொடர்புத் துறை மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.