​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..!

Published : Feb 17, 2020 7:12 PM

தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..!

Feb 17, 2020 7:12 PM

கொரோனாவால் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக சீன அரசு கூறினாலும், அதன் தீவிரம் அதிகரித்து வருகிறது. ஜப்பானில் உள்ள கப்பலில் இருந்து, அமெரிக்கர்கள், தனி விமானங்கள், தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.  

சீனாவின் ஊகான் நகரில், கடந்த டிசம்பரில் தோன்றிய கொரானா, 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவில் கொரானாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 1775ஆக உயர்ந்துள்ளது. கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 71 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஜப்பானில், யோக்கோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ள "தி டைமண்ட் பிரின்சஸ்"(The Diamond Princess) சொகுசு கப்பலில் உள்ள 3700 பேரில், கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 456ஆக உயர்ந்துள்ளது. ஞாயிறன்று ஒரே நாளில், மேலும் 99 பேருக்கு கொரானா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த கப்பலில் உள்ள சுமார் 100 இந்தியர்களில், கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருக்கிறது.

கப்பலில் இருந்து, அமெரிக்கர்களை மீட்கும் பணியை, அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. இரண்டு விமானங்கள் மூலம், டெக்சாஸ் (Texas) மற்றும் கலிபோர்னியா (California) விமான நிலையங்களுக்கு, அமெரிக்கர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களில் 44 பேர், கப்பலிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர்.

கொரானா பரவுவதைத் தடுக்கும் வகையில், ஊகான் உட்பட ஹூபேய் மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் புழக்கத்தில் இருந்த கரன்சிகளை பெற்று அழிக்கும் பணிகளை, சீன மத்திய வங்கி தொடங்கியிருக்கிறது.

கம்போடியாவில் நிறுத்தப்பட்டுள்ள "தி வெஸ்டர்டேம்"(The Westerdam) கப்பலில் இருப்பவர்கள், தங்கள் நாட்டிற்குள் வரக்கூடாது என தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.

கொரோனா பாதிப்பு எதிரொலியால், ஜப்பான் மன்னரது பிறந்தநாளை, பொது விழாவாக கொண்டாடப்போவதில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருக்கிறது. " தி டைமண்ட் பிரின்சஸ்" சொகுசு கப்பலில் உள்ளவர்களுக்கு, தொலை தொடர்பு வசதிக்காக 2,200 ஐ-போன்களை, ஜப்பான் அரசு இலவசமாக வழங்கியுள்ளது.

கொரானா தொற்று பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, உலக சுகாதார அமைப்பின் மற்றொரு குழு சீனாவிற்கு வந்துள்ளது. கொரானா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதாக சீனா தொடர்ந்து கூறிவந்தாலும், அந்நாட்டின் நடவடிக்கைகள் அனைத்தும் பல்வேறு ஐயங்களை உருவாக்கிவிட்டிருப்பதாக, உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.