​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை - காலை இழக்கும் அபாயத்தில் இளைஞர்

Published : Feb 16, 2020 9:18 PM



தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை - காலை இழக்கும் அபாயத்தில் இளைஞர்

Feb 16, 2020 9:18 PM

விபத்தில் சிக்கி எலும்பு முறிவுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஒருவர், அரசு மருத்துவர் நடத்தும் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தனது காலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ்வரன் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது ராஜேஷ்வரனின் பெற்றோரை அணுகிய தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர், அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கப்படாது என்றும், இங்கு எலும்பு முறிவு மருத்துவராக உள்ள பெரோஸ் கான் என்பவரின் தனியார் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்படும் எனக் கூறி புரோக்கர் போன்று மார்கெட்டிங் செய்துள்ளார்.

மகனின் எதிர்காலத்தை கருதி அரசு மருத்துவர் நடத்தும் என்.எச் ஆர்த்தோகேர் என்ற மருத்துவமனையில் ராஜேஷ்வரனை சேர்ந்துள்ளனர் அவரது பெற்றோர். அங்கு அவருக்கு மருத்துவர் பெரோஸ் கான் அறுவை சிகிச்சை செய்ததை அடுத்து, மருத்துவச் செலவு என சிறிக சிறிக 4 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கப்பட்டிருக்கிறது.

அதன் பிறகு ஆறு மாதங்கள் ஆகியும் முன்னேற்றம் இல்லாததால் காலில் போடப்பட்ட கட்டை பிரித்து பார்த்த போது சீல் பிடித்திருந்துள்ளது. இது தொடர்பாக கேட்ட போது மருத்துவர் பெரோஸ் கான் சரியாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது தவறான சிகிச்சை அளிக்கப்பட்டால் இது போன்று நடந்திருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் காலை அகற்றுவது நல்லது எனக் கூறியுள்ளனர்.

இதைகேட்டு அதிர்ந்து போன ராஜேஷ்வரன் மதுரையில் தங்குவதற்கு போதிய பொருளாதார வசதி இல்லாததால் வேறுவழியின்றி மீண்டும் ராமநாதரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காலை அகற்றாமல் பழையப்படி சரிசெய்ய ராஜேஷ்வரனின் பெற்றோர் தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கணவரை கவனித்துக் கொள்ள விருப்பம் இல்லாத அவரது மனைவியும் பிரிந்துச் சென்றதால் மகளுடன் பரிதவித்து வரும் ராஜேஷ்வரன் இழப்பீடு தர வேண்டும் என வலியுறுத்துகிறார். 

தவறான சிகிச்சை குற்றாச்சாட்டு தொடர்பாக மருத்துவர் பெரோஸ் கானை செல்போனில் பல முறை தொடர்பு கொண்டும் அவர் அழைப்பு ஏற்கவில்லை. மருத்துவத்தை சேவை என கருதாமல் பணத்தாசையில் நோயாளிகளிடம் இது போன்று நடக்கும் மருத்துவர்கள் மீது மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.