​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனிமைப்படுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று

Published : Feb 16, 2020 6:06 PM

தனிமைப்படுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று

Feb 16, 2020 6:06 PM

ஜப்பான் துறைமுகத்தில் பல நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள டயமண்ட் பிரின்ஸஸ் சொகுசுக் கப்பலில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரானா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 1,660-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 68, 500 பேர் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து 9,419 பேர் மீண்டுள்ளதாகவும், தற்போது சிகிச்சை பெற்று வரும் 57,416 பேரில் 11,272 பேர் மோசமான நிலையில் உள்ளதாக சீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 3000 ஆண்டு பழமையான மருந்துகளை சீனா கொடுத்து குணப்படுத்த முயன்று வருகிறது. அதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக சொல்லப்படுவதால், பாரம்பரிய சீன மருத்துவர்கள் சுமார் 2200 பேர் ஹுபே மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரானாவின் மையமான ஹூபேய் மாகாணத்தில் தொடர்ந்து 3வது நாளாக, புதிதாக கொரானா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சீனாவின் பிற மாகாணங்களில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து 12வது நாளாக குறைந்துள்ளது.

இதற்கிடையே 3,711 பேருடன் ஜப்பான் யோகஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் மேலும் 70 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது.

அந்த கப்பலில் 132 பணியாளர்கள், 6 பயணிகள் என 138 இந்தியர்களும் உள்ளனர். அவர்களில் 3 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அந்த கப்பலில் இருப்பதால் அவர்களை மீட்க அந்தந்த நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.