​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி... தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...!

Published : Feb 15, 2020 12:55 PM



சென்னையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி... தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...!

Feb 15, 2020 12:55 PM

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறி, தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை

நெல்லை மேலப்பாளையம் சந்தை திடலில் அனைத்து ஜமாத் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர்.

தஞ்சை

தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் ஏராளமானோர் ஆற்றுப்பாலம் பகுதியில் இருந்து ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதற்கு போலீஸ் அனுமதி இல்லாததால் அங்குள்ள பள்ளிவாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி

திருச்சியில் கண்டோன்மென்ட் எம்ஜிஆர் சிலை, மற்றும் தலைமை தபால் நிலையம் அருகில் நூற்றுக்கணக்கானோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மாநகர காவல்ஆணையர் வரதராஜூ வந்து அவர்களுடன் பேச்சு நடத்தியதை தொடந்து கலைந்து சென்றனர்.தொடர்ந்து பாலக்கரை ரவுண்டானா அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டிஎஸ்பி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்த வந்த இஸ்லாமிய அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்நிலையம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் இஸ்லாமியர்கள் கண்டன கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று பண்ருட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனர்.

தஞ்சை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கொரநாட்டுக் கருப்பூர் புறவழிச்சாலையில் எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர், மற்றும் அனைத்து ஜமாத்தார்கள் ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் தலைமை தபால்நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

ஈரோடு

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தடியடி நடந்ததாக கூறி ஈரோடு தலைமை தபால் நிலையம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினார்கள்.

தென்காசி

தென்காசியில் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த இஸ்லாமியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மேம்பாலத்தின் கீழ் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் முக்கிய பிரதிநிதிகள் 4 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அம்மாபட்டினத்தில் ஜமாத்தார்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.