​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனாவை வைத்து Prank Show.. மரண பயம் காட்டிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை.!

Published : Feb 12, 2020 11:55 AM

கொரோனாவை வைத்து Prank Show.. மரண பயம் காட்டிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை.!

Feb 12, 2020 11:55 AM

1,100-க்கும் மேற்பட்டவர்களை பலி கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். பெயரை கேட்டாலே மக்களை நடு நடுங்க வைக்கும் கொரோனாவை Prank Show செய்ய பயன்படுத்திய இளைஞர் ஒருவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மரண பீதி:

சீனாவில் துவங்கி சுமார் 27-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இந்த கொடூர வைரஸ் உருவான சீனாவில் தான் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். எனினும் இந்த கிருமி உலக மக்களிடையே மரண பீதியை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகை இல்லை.

image

மாஸ்கோவில்..

ரஷ்யாவில் 2 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அந்நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் மெட்ரோ ரயில் சென்று கொண்டிருந்தது. ரயிலில் ஏராளமான பயணிகள் அப்போது பயணம் செய்து கொண்டிருந்தனர். இருக்கையில் இடம் கிடைக்காததால் பலர் நின்று கொண்டே மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

image

மெட்ரோவில் கொரோனா.!

அப்போது முகத்தில் மாஸ்க் அணிந்து நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென தடுமாறி ரயில் பெட்டியினுள் கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக அவருக்கு உதவ ஓடி அருகில் சென்றனர். அப்போது அவர் வலிப்பு வந்ததை போல கை, கால்களை வெட்டி வெட்டி இழுத்துள்ளார். அப்போது அருகில் இருக்கும் சிலர் கீழே விழுந்தவரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என கத்தியுள்ளனர்.

image

பயணிகள் ஓட்டம்..

கொரோனா என்ற வார்த்தையை கேட்டதுமே வாலிபருக்கு உதவி செய்ய வந்த கூட்டத்தினர் தலை தெறிக்க அவரை விட்டு விலகி ஓடுகின்றனர். அவருக்கு உதவி போய் தங்களை கொரோனா தாக்கி விட கூடாது என்று ஓடிய பயணிகளால் ரயில் பெட்டியினுள் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இறுதியில் கீழே விழுந்த வாலிபர் பக்கத்தில் ஒருவர் கூட இல்லை. ரயில் பெட்டியின் கதவு எப்போது திறக்கும் தப்பித்து ஓடலாம் என்பதை போல பயணிகள் அச்சத்தின் பிடியில் நின்றனர். கதவு திறந்ததும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று பயணிகள் ரயிலில் இருந்து வெளியேறி ஓடினர். 

கைதான பிராங்ஸ்ட்ர்:

இது தொடர்பான வீடியோ காட்சிகள் Prank Show-வாக வெளியாகி ரஷ்யா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து விசாரணையை துரிதப்படுத்திய அந்நாட்டு காவல் துறை, கொரோனா Prank Show-வில் ஈடுபட்ட கரோமத்துல்லோ ஜாபோரோவ் (Karomatullo Dzhaborov) என்ற பிரபல பிராங்ஸ்ட்டரை கைது செய்தது. இவர் தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிராங் சம்பவத்தை வீடியோ எடுத்த மற்றும் கொரோனா என்று கூச்சலிட அவரது கூட்டாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

5 ஆண்டுகள் சிறை..!

பொதுமக்களை தேவையின்றி அச்சுறுத்திய ஜாபோரோவை, வரும் மார்ச் 8-ம் தேதி வரை விசாரணைக்கு முந்தய தடுப்பு காவலில் வைக்க மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

image

விழிப்புணர்வுக்காகவே..

எனினும் கரோமத்துல்லோ ஜாபோரோவின் வழக்கறிஞர் சம்பவம் பற்றி தெரிவிக்கையில், கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிவது பற்றிய விழிப்புணர்வுகாகத்தான் இந்த பிராங் ஷோ திட்டமிட்டு நடத்தப்பட்டது. இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. எனவே நீதிமன்றத்தில் முறையிட போவதாக கூறியுள்ளார்.

எப்படி இருந்தாலும் உலக நாடுகளுக்கு மரண பயத்தை காட்டி வரும் கொரோனாவை வைத்து, பிராங் ஷோ செய்திருக்க கூடாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.