​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மிகச் சிறந்த மனிதரான மோடி தமக்கு நல்ல நண்பர் - அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம்

Published : Feb 12, 2020 10:23 AM



மிகச் சிறந்த மனிதரான மோடி தமக்கு நல்ல நண்பர் - அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம்

Feb 12, 2020 10:23 AM

இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை குஜராத்தில் சுமார் 70 லட்சம் பேர் திரண்டு வரவேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் முதல்முறையாக இம்மாதம் 24, 25ம் தேதி ஆகிய இருதினங்கள், குஜராத், டெல்லியில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

குஜராத் பயணத்தின்போது அகமதாபாத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய வகையில் சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட கிரிக்கெட் மைதானத்தை பிரதமர் மோடியுடன் சேர்ந்து திறந்து வைக்கவுள்ளார். இந்த மைதானமானது, ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட மிகப்பெரியதாகும். மேலும் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும்.

இதன்பின்னர் மைதானத்தில் நடைபெறவுள்ள கெம் சோ டிரம்ப் ((Kem cho trump)) கூட்டத்தில், பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் மோடியுடன் சேர்ந்து டிரம்ப் உரை நிகழ்த்துவார் என கூறப்படுகிறது.

பின்னர் சபர்மதி நதி முகத்துவாரத்தில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அமெரிக்காவிடம் இருந்து இந்திய மதிப்பில் 14 ஆயிரத்து 239 கோடி ரூபாய் மதிப்பில் ((2 பில்லியன் டாலர்)) நாசாம்ஸ் ((Nasams)) வான்பாதுகாப்பு சாதனத்தை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம், 18 ஆயிரத்து 510 கோடி ரூபாய் மதிப்பில் ((2.6 பில்லியன் டாலர்)) கடற்படை ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம் என கூறப்படுகிறது.

இந்திய சுற்றுப்பயணம் குறித்து ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மோடியை தனது நண்பர் என்றும், சிறந்த நற்பண்புகளை கொண்ட நல்ல மனிதர் என்றும் பாராட்டினார்.

மோடியுடன் வார இறுதியில் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரையிலும் 50 லட்சம் பேர் முதல் 70 லட்சம் பேர் ((5 to 7 millions )) வரை வரவேற்பு அளிப்பார்கள் என மோடி கூறியதாகவும் டிரம்ப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இந்தியா ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாகவும், ஒப்பந்தம் சரியான முறையில் உருவாக்கப்படும் பட்சத்தில், அதை அமெரிக்கா நிச்சயம் செய்து கொள்ளும் என்றும் கூறினார்.