GST-யின் கீழ் ரியல் எஸ்டேட்

நாட்டின் ரியல் எஸ்டேட் துறையை GST-யின் கீழ் கொண்டுவந்து, 12 சதவிகிதம் வரி விதிப்பது பற்றி விரைவில் ஆலோசனை நடத்த இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அருண்ஜேட்லி, அந்நாட்டில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைகழகத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, இந்தியாவில், அதிகப்படியான பணம் புழங்கும் துறையாக உள்ள ரியல் எஸ்டேட் துறை தான், நாட்டில் வரி ஏய்ப்பு செய்வதில் முன்னணியில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வரி ஏய்ப்பையும், கருப்பு பணப்புழக்கத்தையும் கட்டுப்படுத்தும் வகையில், விரைவில் GST-யின் கீழ் ரியல் எஸ்டேட் துறையை கொண்டுவர GST கவுன்சில் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அருண்ஜேட்லி கூறினார். கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பொது கட்டுமானங்கள் ஆகியவை கட்டப்படும்போதோ, அல்லது அவை விற்பனைக்கு வரும்போதோ, 12 சதவிகிதம் GST விதிக்க ஆலோசிக்கப்பட்டிருப்பதாகவும், நிலம் மற்றும் வீட்டு மனை விற்பனை மற்றும் வாங்குவதற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அடிப்படை பொருளாதார சீர்த்திருத்தம் என்று குறிப்பிட்ட அருண்ஜேட்லி, முறையாக வரி செலுத்துவோர் உள்ள நாடு என்ற பெருமையை இந்தியா பெறுவதற்காகவே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறினார். இந்தியாவின் பொருளாதாரத்திற்கு நீண்ட காலம் நல்ல பல பலன்களை அள்ளித்தரும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மகத்துவம், சிலரால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகவும் அருண்ஜேட்லி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன