தனியார் சொகுசு பேருந்தில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை

0 572

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் ஆம்னி பேருந்தில் நகைக்கடை ஊழியர் கொண்டுச் சென்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பி.எம்.ஜே ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டு வருகிறது.  இங்கு வேலை செய்யும் கவுதம் என்பவர், சனிக்கிழமை இரவு ஐதராபாத்தில் உள்ள தலைமை கிளையில் இருந்து சுமார் ஒரு கோடியே நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகளை பேக்கில் வைத்துக் கொண்டு, அங்கிருந்து கோவைக்கு ஆம்னி பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் பேருந்து நிறுத்தப்பட்டிருக்கிறது. அப்போது நகைக்கடை ஊழியர் கவுதம், நகைகளை வைத்திருந்த பேக்கை பேருந்திலேயே வைத்துவிட்டு சாப்பிடச் சென்றதாக கூறப்படுகிறது.

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது நகைகள் இருந்த பேக் கொள்ளை அடிக்கப்பட்டிருந்ததாக சங்ககிரி காவல் நிலையத்தில் நகைக்கடை ஊழியர் கவுதம் புகார் அளித்துள்ளார்.

அதன் பின்னர் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, சந்தேகிக்கும் வகையில் ஒருவன் பேருந்தில் நடமாடிய காட்சிகள் பதிவாகியிருந்தன.

அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார், நகைக்கடை ஊழியர் கவுதமையும் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தில் நகைகள் கொண்டுச் செல்லப்படுவதை முன்பே நன்கு அறிந்தவர்கள், பின்தொடர்ந்து சென்று கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.

இதே போன்று கடந்த டிசம்பர் மாதம் வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே கோவை திருநகரை சேர்ந்த நகை வியாபாரி ஒருவரின் மகன் சொகுசு பேருந்தில் கொண்டுச் சென்ற ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments