தண்ணீருக்கு பதில் குழாய்களில் கொட்டிய சாராயம்.. குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி

0 464

கேரளாவின் திருச்சூர் அருகே அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், தண்ணீருக்கு பதிலாக சாராயம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூர் அருகே அமைந்துள்ளது சாலமன் அவென்யூ அபார்ட்மெண்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு. இந்த குடியிருப்பில் மொத்தம் 18 வீடுகள் இருக்கின்றன. சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பான காலை பொழுதில், குடியிருப்புவாசிகள் தத்தம் வீடுகளில் உள்ள தண்ணீர் குழாய்களை திறந்து பயன்படுத்தியுள்ளனர்.

அப்போது குடி தண்ணீர் மற்றும் பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் என அனைத்து குழாய்களிலும் மது வாசனையுடன் நீர் வந்துள்ளது. போக போக தண்ணீருடன் அதிக அளவு மதுவை கலந்து விட்டதை போல குழாய்களில் இருந்து சாராயம் கொட்டியுள்ளது. இதனால் அதிர்ந்த 18 வீடுகளை சேர்ந்த குடியிருப்புவாசிகள், சாலக்குடி நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையில் புகார் அளித்தனர்.

பின்னர் விசாரணையில் இறங்கிய அதிகாரிகள் குறிப்பிட்ட அடுக்குமாடியில் குடியிருப்போர் அருகில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து, மோட்டார் மூலம் தண்ணீர் பயன்படுத்தி வருவதை கண்டறிந்தனர். இதனை அடுத்து அந்த கிணறை சோதனை செய்தனர் அதிகாரிகள். அப்போது கிணற்று நீர் முழுக்க சாராயம் கலந்திருப்பதை கண்டறிந்தனர்.

இதனால் குழம்பிய அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது தான் கலால் வரித்துறையினரின் அலட்சிய செயல் வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் சாலமன் அவென்யூவிற்கு அருகில் இருந்த மதுபான கடையில், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட 6,000 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளது கலால் வரித்துறை. இது தொடர்பான வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை அழிக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் 6,000 லிட்டர் சாராயத்தை எங்கு எடுத்து சென்று அழிப்பது என திகைத்த அதிகாரிகள், சாலமன் அவென்யூவிற்கு அருகில் மதுபான கடை செயல்பட்ட இடத்திற்கு பக்கத்திலேயே குழி தோண்டி பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை ஊற்றியுள்ளனர்.

கலால் வரித்துறையினரின் இந்த நடவடிக்கையால் தான், நிலத்தடி நீரில் கலந்த சாராயம் குடி நீர் கிணறை, சாராய கிணறாக மாற்றியுள்ளது. இதனை அடுத்து சாராய கிணறை மீண்டும் நன்னீர் கிணறாக மாற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தற்காலிகமாக குடியிருப்பாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments