பிரான்ஸில் பரவுவதற்கு தயாராக உள்ள வைரஸ்.. அச்சத்தில் விவசாயிகள்

0 589

சீனா மட்டுமின்றி பல உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இன்னும் கட்டுப்படுத்தப்படாத நிலையில், பிரான்ஸ் நாட்டில் பரவுவதற்கு தயாராக வைரஸ் ஒன்று உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸை அச்சுறுத்தும் இது குணப்படுத்த முடியாத தாவர வைரஸ் ஆகும். மனிதர்களிடையே இது பரவாவிட்டாலும், அந்நாட்டில் விளையும் தக்காளி, மிளகு மற்றும் சிவப்பு மிளகாய் பழம் உள்ளிட்ட தாவரங்கள், இந்த வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது பற்றி தகவல் தெரிவித்துள்ள அந்நாட்டின் உணவு மற்றும் சுகாதார நிறுவனமான Anses, தக்காளி, மிளகாய் உள்ளிட்டவற்றிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸிற்கு tomato brown rugose fruit virus (ToBRFV) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முதல் முதலாக 2014ம் ஆண்டில் மத்திய கிழக்கு நாடுகளில் கண்டறியப்பட்டது.

அதன் பின்னர் பல உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. இது பற்றி கூறியுள்ள Anses, தற்போது இந்த வைரஸ் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழையவிட்டாலும், விரைவில் பிரான்ஸ் நாட்டு தாவரங்களை தாக்கும் அபாயம் உள்ளதாக கூறியுள்ளது.மேலும் இந்த தக்காளி வைரசால் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ பாதிப்பு இல்லை.

ஆனால் இந்த வைரஸ் தாக்கினால் தாவரங்கள் அல்லது பழங்களின் விளைச்சல்களில் கடும் பாதிப்பு ஏற்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை கொடுக்கும். தாவரங்களுக்கு இடையே மிக எளிதில் பரவும் இந்த வைரஸ், வேர் முதல் இலை நுனி வரை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

தவிர தோட்ட வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் கையுறைகள், கருவிகள் உள்ளிட்டவற்றில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இந்த வைரஸ் தாக்கும் தாவரங்களில் இலைகளின் நிறம் இயற்கைக்கு மாறாக இருக்கும். மேலும் பாதிக்கப்பட்ட தாவரங்களின் பழங்களின் மேல் பழுப்பு அல்லது கருப்பு நிறம் படர்ந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தாக்கினால் தக்காளி, மிளகு மற்றும் மிளகாய் பழங்கள் சரியாக வளராது. மேலும் அவற்றின் இயற்கையான நிறம் மாறிவிடும் என்பதால் நுகர்வோர்களும் அவற்றை வாங்க மறுப்பார்கள். இதனால் பெருமளவில் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். மேலும் இந்த வைரஸ் விதைகளின் வழியே கூட பரவ வாய்ப்புள்ளது. எனவே ஆன்லைன் மூலமாகவோ அல்லது தெரியாத இடங்களில் இருந்தோ விதைகளை வாங்க வேண்டாம் என பிரான்ஸ் விவசாயிகளை, அந்நாட்டின் உணவு மற்றும் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஒரு வேளை தாவரங்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டால் அவற்றை வேரோடு அறுத்தெடுத்து, தீயிட்டு அழிப்பதை தவிர வேறு வழி இல்லை என்கின்றனர் நிபுணர்கள். அப்படி இல்லையெனில் வரும் முன் காத்து கொள்வதே சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments