கொலையா ? தற்கொலையா ?

0 416

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் தற்கொலை என நினைத்து ஒருவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் உறவினர்கள் தகனம் செய்தனர். ஆனால் அவரை மதுபோதையில் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக கூறி நண்பர் ஒருவர் சரண் அடைந்துள்ளார்.

தரங்கம்பாடி அடுத்த ஒழுகைமங்கலத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவர் பக்கத்துவீட்டை சேர்ந்த ராகவி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துக் கொண்டு குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். பழனியில் கொத்தனார் வேலை செய்து வந்த விஸ்வநாதன் என்ற நண்பர், பொங்கலுக்காக சொந்த ஊர் வந்திருந்த போது அவரை கடந்த 14ம் தேதி மணிமாறன் சந்தித்து பேசியுள்ளார். பின்னர் இருவரும் மணிமாறனின் வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் இரவு மது அருந்தியுள்ளனர்.

மறுநாள் காலையில் கழிவறைக்கு சென்ற போது அங்கிருந்த மரத்தில் தலையில் காயத்துடன் தூக்கில் தொங்கியவாறு மணிமாறனின் உடல் இருந்ததை கண்டு அவரது மனைவி ராகவி அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது எதுவும் தெரியாதது போன்று நடித்த நண்பர் விஸ்வநாதன் உடலை கீழே இறக்க உதவி செய்துவிட்டு அங்கிருந்து நழுவியுள்ளார்.

அன்றைய தினம் பொங்கல் பண்டிகை என்ற நிலையில் மணிமாறன் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் கருதியதாக கூறப்படுகிறது. இத்தகவலை போலீசாருக்கு தெரிவிக்காத அவர்கள் மணிமாறன் உடலையும் இறுதி மரியாதை செலுத்தி தகனம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் எருக்கட்டாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்த நண்பர் விஸ்வநாதன், மணிமாறனை தாம் கொலை செய்ததாக கூறி அதிர வைத்துள்ளார். சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் பாட்டிலால் தலையில் அடித்துக் கொன்று தற்கொலை போன்று இருப்பதற்காக மணிமாறனி உடலை தூங்கில் தொங்கவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தற்போது மனசாட்டி உறுத்தியதால் சரண் அடைந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் பொறையாறு காவல்துறையினர் விஸ்வநாதனை கைது செய்தனர். கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments