அனுமதியின்றி மலையேற்றம்... யானை தாக்கி பெண் அதிகாரி பலி

0 1984

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பாலமலையில் அனுமதி இல்லாமல் மலையேற்றத்தில் ஈடுபட்ட போது காட்டு யானை தாக்கியதில், தனியார் மருத்துவமனை பெண் அதிகாரி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பரந்து விரிந்து காணப்படுகிறது பாலமலை வனப்பகுதி. இதனுடைய அடிவாரமான குஞ்சூர்பதி கிராமத்தில் இருந்து மாங்குழி வழியாக பாலமலைக்கு சிலர் அடிக்கடி மலையேற்றத்தில் ஈடுபடுவது வழக்கம். அங்கு மலையேற வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படாத நிலையில், ஆபத்தை உணராமல் சிலர் அனுமதி இன்றி மலையேற்றத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த புவனேஸ்வரி என்பவர், தனது கணவர் மற்றும் நண்பர்கள் ஆறு பேருடன் பாலமலைக்கு சென்றுள்ளார். ஞாயிற்று கிழமை அதிகாலை அடிவாரத்தில் இருந்து எட்டு பேரும் சென்றுக் கொண்டிருந்த போது, ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று வழிமறித்துள்ளது. யானையை கண்ட பதற்றத்தில் அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில், புவனேஸ்வரியை துரத்திச் சென்ற அந்த யானை அவரை தாக்கி கொன்றது.

இது குறித்து கணவர் பிரசாந்த் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் புவனேஸ்வரியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புவனேஸ்வரி தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் பாலமலை வனப்பகுதிக்குள் அவ்வப்போது அனுமதி பெறாமல் மலையேற்றத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதே போன்று பாலமலைக்கு ஏராளமானவர்கள் அவ்வப்போது மலையேற்றத்திற்காக செல்வதாகவும், இது குறித்து வனத்துறையினர் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வனத்துறையினர் முறையாக ரோந்து சென்று மலையேற்றத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற தேவையற்ற உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

அதே வேளையில் வனத்துறை அனுமதியுடன் மலையேற்றத்தில் ஈடுபட பல இடங்கள் இருக்கும் நிலையில், பாலமலை போன்ற அனுமதி இல்லாத விபரீத மலைப்பயணத்தை மேற்கொள்ளவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments