"வாரணம் ஆயிரம்" வழியில் மீண்டெழுந்துள்ளேன்.. மனம் திறந்த நடிகர் விஷ்ணு விஷால்

0 1276

பொதுவாக திரையுலக பிரபலங்கள் இனிமையான தருணங்களை பொது வெளியில் பகிர்வார்கள். மனஅழுத்தம் மிக்க இருண்ட பக்கங்களை வெளியிட மாட்டார்கள். இதனிடையே நடிகர் விஷ்ணு விஷால் தனது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் பற்றியும், அதிலிருந்து மீண்டு வந்துள்ளது பற்றியும் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷாலின் திருமண வாழ்வு கசப்பில் முடிந்தது. காதலித்து திருமணம் செய்திருந்த தன் கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை, கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இந்நிலையில் வாரணம் ஆயிரம் வழியை தேர்வு செய்தேன் என்று தலைப்பு கொடுத்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடிதத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஏராளமானஅனுபவங்களை கற்றுள்ளேன். நானும், என் மனைவியும் பிரிந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனது மகனையும் பிரிந்தது என்னை கடும் வேதனைக்கு உள்ளாகியது. இதனால் மது பழக்கத்திற்கு அடிமையானேன். கூடவே நிதி நெருக்கடியும் சேர்ந்ததால் கடும் மனஉளைச்சலில் சிக்கி தவித்தேன்.

இதனால் நாளுக்கு நாள் மது பழக்கம் அதிகரித்தது. சரியாக தூங்காததால் ஒரு கட்டத்தில் உடல் நலனும் கடுமையாக பாதிக்கப்பட்டது. படப்பிடிப்பு ஒன்றில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சையும் செய்து கொள்ள நேர்ந்தது. தொடர்ந்து மோசமான அனுபவங்களையே பெற்று கொண்டிருந்தேன். இதனால் என் குடும்பம் குறிப்பாக என் அப்பா கடுமையாக பாதிக்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில் எனது வாழ்க்கையை மீட்டு எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். இதனை அடுத்து மன அழுத்தத்தில் இருந்து மீள சிகிச்சை எடுத்தேன். தொடர்ந்து யோகா செய்தேன். மனதை ஒருநிலைப்படுத்தி, என்னை சுற்றி நேர்மறையாக சிந்திக்கும் நபர்களை மட்டுமே வைத்து கொண்டேன். ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு மாறினேன். அளவுக்கு அதிகமான மதுபழக்கத்திலிருந்து சிறிது சிறிதாக என்னை விடுவித்து கொண்டேன்.

முறையான ட்ரைனரை வைத்து சீரான உடற்பயிற்சியில் ஈடுபட்டேன்.  இதனால் சுமார் 16 கிலோ எடை குறைந்து, கட்டுக்கோப்பான உடலமைப்பை பெற்றேன். ரசிகர்களுக்கு நான் சொல்லி கொள்வது, எந்த மோசமான நிலையில் இருந்தும் துள்ளி எழுந்து மீள முடியும். சுயஒழுக்கம் மற்றும் நேர்மறையாக தொடர்ந்து சிந்திப்பது உள்ளிட்டவற்றை கடைபிடியுங்கள்.

எதிர்காலம் எனக்கு எதை வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், நான் எப்போதும் என் உடலையும் மனதையும் இணைத்து இறுக்கமாக வைத்திருக்க போகிறேன் என கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments