வடமாவட்டங்களில் மழை..!

0 991

வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சிவகங்கை, தஞ்சை, நாகை  மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் விலகிவிட்ட நிலையில், பகலில் வறண்ட வானிலையும், அதிகாலையில் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக பல மாவட்டங்களில் நள்ளிரவிலும், அதிகாலையிலும் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில், பல பகுதிகளில் இன்று அதிகாலையில் லேசான சாரல் மழை பெய்தது. 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், ஜனப சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் பலத்த மழை வெளுத்து வாங்கியது.

திருவண்ணாமலை, விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களிலும், புதுச்சேரியில் காமராஜ் நகர், முத்தியால்பேட்டை, கோரிமேடு, நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளிலும் இன்று காலை விட்டு விட்டு மழை பெய்தது.

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, திருக்குவளை, வலிவலம், கொளப்பாடு, ஆதமங்கலம், விடங்கலூர், சித்தாய்மூர், எட்டுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை கனமழை கொட்டியது.

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், ஆடுதுறை, திருநாகேஸ்வரம், தாராசுரம் உள்ளிட்ட பகுதிகளில், இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் காலை 7 மணி முதல் மிதமான மழை பெய்தது.

நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மழையால் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர், நன்னிலம், பூந்தோட்டம், குடவாசல், பேரளம், கொல்லூமாங்குடி, காட்டூர், மாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மிதமான மழை பெய்தது.

இந்த மழையால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள், உளுந்து உள்ளிட்ட பயறு சாகுபடி பாதிப்படையும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் கோனூர், வடகரை, நத்திமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென மழை பெய்தது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது. அதன்பிறகு விட்டுவிட்டு மதியம் வரை சாரல் மழை பெய்தது. இந்த மழை நெற்பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வல்லம், அய்யம்பேட்டை, ஒரத்தநாடு, பாபநாசம் ஆகிய பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளான அம்மையப்பட்டு, மும்முனி, கீழ்சாத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் லேசான மழை பெய்தது. மதியம் சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments