அசத்தியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!

0 1165

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பல நூறு காளை களமாடி, காளையர்கள் உற்சாகத்துடன் விளையாடி அவற்றை அடக்கினர். வெற்றி கண்ட வீரர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு என்று சொன்னலே நினைவுக்கு வரும் அலங்காநல்லூரில் இன்று அரங்கேறியது காளைகளுக்கும், காளையருக்குமான மல்லுக்கட்டு. தமிழர்களின் பராம்பரிய வீர விளையாட்டு மண் மணம் மாறாமல் நடப்பு ஆண்டிலும் அரங்கேறியது.  டோக்கன் வழங்கப்பட்ட 700 காளைகளும், பதிவு செய்யப்பட்ட 921 காளையர்களும் காலை 7 மணி முதலே களத்தில் தயாராகி விட்டனர். இதனால் காலை 7.30 மணிக்கே போட்டி தொடங்கியது.

விழாக்குழு அறிவிப்புக்கு பின்னர் மாவட்ட கலெக்டர் வினய் உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் அதனை ஏற்றனர். ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் மேற்பார்வையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வினய், எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சரவணன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

அதன் பிறகு டோக்கன் வழங்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக களம் கண்டன. அதனை காளையர்கள் போட்டி போட்டு பிடித்தனர். 921 மாடுபிடி வீரர்கள், குழு குழுவாக களம் இறக்கப்பட்டனர்.ஒரு குழுவுக்கு 75 பேர் வீதம் வீரர்கள் களமாட அனுமதிக்கப்பட்டனர்.

வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளின் திமில்களை பிடித்து வீரர்கள் அடக்க முயன்றனர். பல காளைகள் இதில் சிக்கினாலும் சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடின.

ஒரு காளையை ஒரு வீரரே பிடிக்க வேண்டும் என்ற விதியை கடைபிடித்த வீரர்கள், காளையின் திமிலை ஒருவர் பிடித்தவுடன் மற்றவர்கள் விலகினர். திமிலை பிடித்த காளையரை ஊதித்தள்ள காளை துள்ளி குதித்து சுழன்று பலரையும் பயமுறுத்தியது. ஆனாலும் காளையை அடக்கி பரிசுகளை காளையர்கள் வென்றனர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு இரு சக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளி காசுகள், அண்டாக்கள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.
இதேபோல் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பார்வையாளர்கள் பக்கம் காளைகள் திரும்பிவிடாமல் இருக்க வாடிவாசல் முன்பிருந்து நீண்ட தூரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டை காண வந்த வெளிநாட்டினருக்கு தனி கேலரி அமைக்கப்பட்டு இருந்தது. அதில் அமர்ந்து அவர்கள் ஜல்லிக்கட்டை பார்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments