தமிழகம் முழுவதும் களை கட்டிய பொங்கல் கொண்டாட்டம்...

0 291

தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் தமிழர் திருநாளான பொங்கல் விழா களை கட்டி உள்ளது. பொங்கல் இட்டும், பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபட்டும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்கள் களிப்பில் ஆழ்ந்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பொதுமக்கள் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து கும்மியடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். பெருமுளை கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து சூரியனை வழிபாடு செய்தனர். பின்னர் தாரை தப்பட்டையுடன் பராம்பரிய நடனமாடியும் விளையாடியும் பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

திண்டுக்கல்லில் அதிகாலையிலேயே ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசலில் பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபாடு செய்தனர். பனிப்பொழிவு அதிகமாக இருந்த போதும் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோயிலில் நடந்த பொங்கல் விழாவில் ஏராளமான வெளிநாட்டினர் பங்கேற்றனர். அதிகாலையில் ஒரே நேரத்தில் 251 பானைகளில் பொங்கல் வைத்து பொதுமக்கள் சூரிய பகவானை வழிபாடு செய்தனர். ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் கலந்துகொண்டு பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இதையடுத்து கலை, பண்பாட்டுத் துறை சார்பில் செண்டைமேளம், நாதஸ்வரம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் களை கட்டின

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தேவாலயம் முன்பு பொங்கலிட்டு கிறிஸ்தவ மக்கள் கொண்டாடினர். நாட்டார்குளத்தில் புனித சூசையப்பர் ஆலயம் முன்பு  11 பானைகளில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இதையடுத்து தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.

திருப்பூர் சாமுண்டிபுரத்தில் மத பாகுபாடியின்றி ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். நுற்றுக்கும் மேற்பட்டோர் முக்கிய வீதிகளின் வழியே முளைப்பாரி எடுத்துச் சென்று சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றனர். மேலும் விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு குலுக்கல் முறையில் பிரிட்ஜ், வாஷிங்மிஷின், பீரோ உள்ளிட்ட பொருட்கள் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கும்மிப்பாட்டு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

சென்னை கோடம்பாக்கத்தில் பாரம்பரிய முறைப்படி நடந்த பொங்கல் விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். புலியூரில் நடந்த இந்த சமத்துவ பொங்கல் விழாவில் சாதி மத பேதமின்றி பாரம்பரிய உடையணிந்து பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். தலைப் பொங்கல் கொண்டாடும் புதுமணத் தம்பதியினரும் அதிகளவில் இடம்பெற்றிருந்தனர்.

தருமபுரியில் சிறுவர் முதல் பெரியோர் வரை உற்சாகத்தடன்  சமத்துவப் பொங்கல் விழாவை கொண்டாடினர். உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். அதை தொடர்ந்து நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வயது வித்தியாசமின்றி ஏராளமானோர் பங்கேற்றனர்.

முல்லை பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் பிறந்ததாளை முன்னிட்டு தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பாலார்பட்டியில் சிலம்பாட்டம், தேவராட்டங்களுக்கு இடையே காளைகளுடன் ஊர்வலமாக சென்று பென்னிகுக் நினைவு மண்டபத்தின் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர்.

தஞ்சாவூர் அருகே வீரசிங்கம்பேட்டையில் நடந்த பொங்கல் விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மாரியம்மன் கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதில் பங்கேற்ற வெளிநாடுச் சுற்றுலாப் பயணிகள், மாட்டுவண்டியில் ஊர்வலமான சென்று கிராமத்தின் அழகை ரசித்தனர். மேலும் ஊர்வலத்தில் தப்பாட்டம், கரகம், சிலம்பம் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருந்தன.  

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைச்சர் நிலோபர் கபில் மாட்டுவண்டியில் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். மேலும் பொங்கல்பண்டிகையொட்டி நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே இந்திய சுற்றுலா துறை சார்பில் நடந்த பொங்கல் விழாவில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கலந்து கொண்டனர். வடகடும்பாடி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து நடந்த தப்பாட்டம், மையிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன் ஆடியும்பாடியும் மகிழ்ந்தனர்.

மேலும் கயிறு இழுத்தல், உறியடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments