ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிமுறைகள், விதிமுறைகள்..!

0 326

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விவரிக்கின்றது இந்த தொகுப்பு..

தமிழகத்தின் தொன்மையான வீரவிளையாட்டாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகள், பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக சமகாலத்திலும் சில தடைகளை கடந்து தமிழக கிராமங்களில் நடைபெற்று வருகின்றன.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி இந்திய விலங்குகள் நல வாரியம் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிப்பதற்காக 15 பேர் கொண்ட குழுவினை அமைத்ததோடு , வழிகாட்டு விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு அனுமதி சீட்டு வழங்குவதற்கு முன் உடல்தகுதி உள்ளதா, 120 சென்டிமீட்டர் உயரத்திற்கும் மேல் உள்ளதா என கால்நடை மருத்துவர்கள் குழு சோதித்த பின்னரே அனுமதி டோக்கன் அளிக்க வேண்டும் . மேலும் பங்கேற்கும் காளையின் வயது 3க்கு மேல் 15வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். போட்டி நடைபெறும் அனுமதிக்கப்பட்ட திடலில் வாடிவாசல் வழியாக மட்டுமே காளைகளை களத்திற்கு அனுப்பவேண்டும்.

நடப்பு ஆண்டு 21 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. வீரர்கள் காளையின் திமிலில் மட்டுமே பிடித்து தொங்க வேண்டும். குறிப்பாக காளையின் வால் , கால் , கழுத்து, கொம்பு அல்லது உடலின் மற்ற பாகங்களையோ பிடிக்க கூடாது, துன்புறுத்தவும் கூடாது. வாடிவாசலில் இருந்து சீறி களத்திற்குள் வரும்போது ஒரே நேரத்தில் இருவர் திமிலில் தொங்கக் கூடாது.

குறிப்பாக போட்டிதுவங்கும் முன் பங்கேற்கும் காளைகளுக்கு போதை வஸ்த்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளனவா என கால்நடை மருத்துவர்கள் சோதித்தபின்னரே அனுமதிக்க வேண்டும். அவ்வாறு போதை வஸ்த்துக்கள் கொடுத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மதுபானம் அல்லது போதை பொருட்கள் உட்கொட்டிருந்தால் மாடுபிடி வீரர்களை அனுமதிக்க கூடாது என்பது விதிமுறையாகும். மேலும் , போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்கள் ஒருநாள் ஆயுள் காப்பீடு எடுத்திருக்க வேண்டும்.

வாடிவாசலில் இருந்து களத்திற்கு வந்த காளை, மாடுபிடி வீரரை தூக்கியெறிந்தாலோ, வீரர்கள் கையில் சிக்காமல் எல்லையைக் கடந்தாலோ காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். களத்தில் பாயும் காளையின் திமிலைப் பற்றி குறிப்பிட்ட தூரம் வரை வீரர் கடந்துவிட்டால் மாடு பிடிபட்டதாகவும், வீரர் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்படும். களத்தில் உள்ள காளையை துன்புறுத்தினால் குறிப்பிட்ட நபர் வெளியேற்றப்படவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி துவங்குவதற்கு முன்னரே காளைகள் மற்றும் வீரர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான மையங்கள், ஆம்புலன்ஸ்கள், பார்வையாளர்கள் மாடங்கள் , கண்கானிப்பு கேமராக்கள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் அமைத்திருக்க வேண்டும். இது போன்ற அனைத்து வழிகாட்டு விதிமுறைகளும் முறையாக கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments