ஒழுங்கீனத்தால் சிதைந்த குடும்பம்.. மனைவி கொலை - கணவன் கைது..!

0 440

புதுக்கோட்டை அருகே விவாகரத்தாகிச் சென்ற மனைவி வேறு பல ஆண்களோடு தொடர்பில் இருந்த ஆத்திரத்திலும் மாதா மாதம் ஜீவனாம்ச தொகை கொடுக்க விருப்பமின்றியும் அவரை கொலை செய்து புதைத்துவிட்டு 2 ஆண்டுகளாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டான்.

ஆலங்குடியைச் சேர்ந்த சரண்யாவுக்கும் பள்ளத்திவிடுதியைச் சேர்ந்த ராஜாவுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. 2 ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்று பிரிந்து, சரண்யா அவரது தந்தை குணசேகரோடு வசித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜீலை 16-ம் தேதி குணசேகர் வீட்டில் இல்லாத நிலையில், சரண்யா மாயமாகியுள்ளார். அவரை காணவில்லை என குணசேகர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

விசாரணையில் இறங்கிய போலீசார், விவாகரத்தாகிப் பிரிந்த கணவன் ராஜாவை சரிவர விசாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல் அவனும் மனைவியை பல இடங்களில் தேடுவதுபோல் நாடகமாடி வந்துள்ளான்.

போலீசாரின் விசாரணையில் தொய்வு இருப்பதாகக் கூறி சரண்யாவின் தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கை கையிலெடுத்த சிபிசிஐடி போலீசாரின் சந்தேகப் பார்வை ராஜாவின் மீதே ஆழமாக விழுந்தது. அவனைப் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்ததில் கொலையை ஒப்புக்கொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.

விவாகரத்தாகிச் சென்ற சரண்யாவுக்கு ராஜா மாதா மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.

இந்தத் தொகையை தர விருப்பம் இல்லாமலும் வேறு ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்ற மனநிலையிலும் இருந்துள்ளான் ராஜா. இந்த நிலையில்தான் சரண்யா மாயமாவதற்கு சில தினங்களுக்கு முன் நண்பர்கள் ரகு, பாஷா, ராகுல் ஆகியோரோடு அமர்ந்து மது அருந்தி இருக்கிறான் ராஜா.

அப்போது, அவனது மனைவி சரண்யா தம்மோடு தொடர்பில் இருப்பதாகக் கூறி ராஜா கண்முன்னேயே ரகு சரண்யாவை செல்போனில் அழைத்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா, தன் மனைவியை கொலை செய்தால் ஒரு லட்ச ரூபாய் தருவதாகப் பேரம் பேசியிருக்கிறான்.

அதற்கு நண்பர்களும் ஒப்புக்கொண்டு சரண்யாவை கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் ராஜா கூறியிருக்கிறான். தற்போது ராஜாவும் ரகுவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சம்புரான்பட்டி காட்டுப்பகுதியில் சரண்யாவை புதைத்ததாக ரமேஷ் காண்பித்த இடத்தில் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு தோண்டிப் பார்த்தபோது, அங்கு எலும்புத் துண்டுகள், மண்டையோடு, நகைகள், துணி உள்ளிட்டவை கிடைத்தன.

கணவன், மனைவி இருவரின் ஒழுங்கீனமான நடவடிக்கையால் அந்தக் குடும்பமே சிதைந்து, இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments