ஜல்லிக்கட்டில் சீறிப் பாய தயாரானக் காளைகள்..!

0 1392

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைக்கட்டத் துவங்கியுள்ள நிலையில் காளைகளுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கப்படுகிறது, வீரர்கள் எவ்வாறு தயாராகின்றனர் உள்ளிட்டவற்றை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

ஜல்லிக்கட்டு போட்டிகள் வெறும் பொழுதுப்போக்கு மட்டுமல்ல, இன்றும் தென் மாவட்ட கிராம மக்களின் வாழ்வியலோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப்பிணைந்தே இருக்கிறது.

ஆண்டுக்கொருமுறை வரும் ஜல்லிக்கட்டு பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பாலமேடு , அலங்காநல்லூர் பகுதிகளில் தீவிரமெடுத்துள்ளன.

மயிலக் காளை, மச்சக்காளை, கூழைச் சிவலை, காங்கேயம் போன்ற தமிழக நாட்டுக் காளை இனங்களுக்கு இயல்பாகவே சீறும் திறனும், பலமும், வீரியமும் அதிகம். அவற்றுக்கு மேலும் திறன் வளர்க்க போட்டிகள் துவங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் இருந்தே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

கற்கள், மேடு பள்ளம் நிறைந்த காட்டுப்பகுதியில் சூரிய உதயத்தின் போது துவங்கி ஒருமணி நேரத்திற்கு காளைகளுக்கு நடைபயிற்சி வழங்கப்படும். இதனால் அவற்றின் கால்களின் தசைகள் இறுகி திடமாகின்றன. குவிந்துக்கிடக்கும் மண்ணில் கொம்புகளால் குத்தி பயிற்சி வழங்குவதால் இரு கொம்புகளும் உறுதியாகி எதிரே பிடிக்க வரும் வீரரை தூக்கியெறியும் திறன் கிடைக்கும் என விளக்குகிறார் காளை பயிற்சியாளர் கார்த்தி.

நூற்றுக்கணக்கான வீரர்கள் நிற்கும் களத்தில் உட்புகுந்து சிக்காமல் வெளியேறுவதற்கான ஸ்டெமினா கிடைப்பதற்கு காளைகளுக்கு நீச்சல் பயிற்சி மிக அவசியம் எனுக்கூறும் சேகர் , தன்னுடைய காளை கருப்பன் பல போட்டிகளில் வென்றுள்ளதாக பெருமிதம் கொள்கிறார்.

காளைகளுக்கு பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே போல் மாடுபிடி வீரர்களுக்கும் உடற்பயிற்சி மிக அவசியம் எனவும் மாடுபிடிப்பதன் சூட்சுமம் குறித்தும் விவரிக்கிறார் மாடுபிடி வீரர் முருகன்.

போட்டிகளில் காளைகளை பிடிக்க புஜபல உடல் அமைப்பு முக்கியம் என்பதைவிட வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளையை கூர்ந்து கவனிக்கும் திறனும் மன உறுதியும் கூட மிக அவசியம் என்கிறார் மாடுபிடி வீரர் குமார். பொங்கல் பண்டிகையில் இருந்து தொடர்ந்து நடைபெறவுள்ள போட்டிகளுக்காக தயாராகி நாங்க ரெடி வீரர்களே நீங்க ரெடியா என சாவல்விட்டு கொம்புச்சீவி காத்திருக்கின்றன ஜல்லிக்கட்டு காளைகள்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments