கையை அறுத்துக் கொண்ட ஏர் இண்டியா பெண் ஊழியர்..! அதிகாரி மீது மோசடி புகார்
சென்னை விமான நிலையத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் மேற்பார்வை அதிகாரி, வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி, ஒரு கோடியே 62 லட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டதாக கூறி, கையை அறுத்துக் கொண்ட பெண் ஊழியர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை விமான நிலைய உள்நாட்டு சரக்கு முனையத்தில் ஏர் இந்தியாவின் மேற்பார்வை அதிகாரியாக பணிபுரிந்து வருபவபர் மோகனன். இவரது மனைவி சப்தகிரி கார்கோ என்ற பெயரில் பார்சல் நிறுவனம் நடத்திவருகின்றார். ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் இந்த நிறுவனத்தை கடந்த 14 ஆண்டுகளாக மோகனனின் மனைவி நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில் ஏர் இந்தியாவில் ஒப்பந்த ஊழியராக பணியில் சேர்ந்த 26 வயது பெண்ணான டிம்பிள் சியா என்பவர், மோகனன் குடும்பத்தினரிடம் நெருங்கிப் பழகியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் டிம்பிளின் நண்பர் ஒருவருக்கு மோகனன் 5 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகின்றது.
இதையடுத்து தனது காதலன் விக்னேஷ் என்பவருக்கு பணி கிடைக்க ஏற்பாடு செய்யும் படி மோகனனிடம் டிம்பிள் கேடுக் கொண்டதாக கூறப்படுகின்றது. 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் ஏர் இந்தியாவில் டெர்மினல் மேலாளர் பணி பெற்று தருவதாக கூறி, கொஞ்சம் கொஞ்சமாக மொத்த தொகையையும் பெற்றுக் கொண்டு மோகனன் பணியை பெற்றுக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.
முன்னதாக டிம்பிள், தனது காதலனுக்கு மோகனன் மூலம் வேலை கிடைக்க போகும் தகவலை சொல்ல அதனை கேட்டு 30க்கும் மேற்பட்டவர்கள் தலா 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணிக்காக டிம்பிள் மூலம் மோகனனிடம் கொடுத்ததாக கூறப்படுகின்றது. கடந்த 6 மாதங்களில் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாயை ரொக்கமாக மோகனனிடம் கொடுத்ததாகவும், அவர் பணத்தை பெற்றதற்கு ஆதாரம் இல்லை என்று அதனை திருப்பித் தர மறுத்ததாகவும் கூறப்படுகின்றது.
ஒரு கட்டத்தில் டிம்பிளிடம் வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்க, தாய்-தந்தை போலப் பழகிய மோகனன் குடும்பத்தினர் பணத்தை கொடுக்க மறுத்ததால் விரக்தி அடைந்த டிம்பிள் கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றதோடு மரண வாக்குமூலம் என்று வீடியோ ஒன்றையும் பதிவிட்டார்.
அவரை உரிய நேரத்தில் டிம்பிளை மருத்துவமனையில் சேர்ந்து, அவரது தாய் பிழைக்கவைத்த நிலையில், மோகனனிடம் தான் பணம் கொடுத்து ஏமாந்தது குறித்தும், தன்னிடம் இருந்து பெற்ற ஒரு கோடியே 62 லட்சம் ரூபாயை திரும்ப பெற்றுத்தரக் கோரியும் டிம்பிள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்
அதே நேரத்தில் இந்த புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள மோகனன், தான் இது வரை டிம்பிளிடம் ஒரு டீ கூட வாங்கிக் குடித்ததில்லை என்றும் யாரிடமோ, பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டு தன்னை சிக்கவைக்க நினைப்பதாக தெரிவித்தார்.
மோகனனை தந்தை அந்தஸ்தில் நம்பியதே டிம்பிளின் கையறு நிலைக்கு காரணம் என்கிறார் டிம்பிளின் காதலன் விக்னேஷ்.
நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை தூக்கி நிறுத்த, மத்திய அரசும், விமான போக்குவரத்து துறையும் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றது. அதே நேரத்தில் அங்கு சாதாரண மேற்பார்வை அதிகாரியாக பணியில் உள்ளவரின் மனைவி பெயரில் நடத்தப்படும் சப்தகிரி கார்கோ எப்படி கோடிகளை லாபமாக ஈட்டுகிறது ? என்று விசாரணையை தொடங்கினாலே பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
Comments