களைகட்டும் பொங்கல் கொண்டாட்டம்

0 503

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியரின் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் இயங்கி வரும் சவுடேஸ்வரி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில், பாரம்பரிய உடை அணிந்து வந்த மாணவ, மாணவியர் குழுக்களாக பிரிந்து பொங்கல் வைத்தனர்.சேலம் அம்மாப்பேட்டை ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் மாணவிகள், பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் வைத்தனர். ராட்டினம், மாட்டு வண்டி, பாரம்பரிய உணவுகள் என உற்சாகமாக கொண்டாடினர்.

விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் வைத்த பின்னர், பள்ளி மாணவ, மாணவியரின் உரியடி, ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில், பொங்கல் கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்றது. குழுக்களாக பிரிந்து பொங்கல் வைத்த மாணவியர், பொங்கலோ பொங்கல் என உற்சாக குரலெழுப்பினர். கல்லூரி முழுவதும் வண்ண வண்ண கோலங்களும் இடப்பட்டிருந்தன.

தஞ்சை விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாணவிகளும், பேராசிரியைகளும் இணைந்து பொங்கல் வைத்தனர். கும்மி பாட்டு பாடி வட்டமாக சுற்றி வந்த மாணவிகள், நடனமாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் பாரம்பரிய உடை அணிந்து வந்த மாணவிகள், மண்பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் 101 பானைகளில் மாணவிகள் பொங்கல் வைத்தனர். மேலும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவாகவும் பொங்கல் வைத்தனர்.

 விரகனூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், மாணவர்களின் குடும்பத்தினர் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. குடும்பமாக வந்த மாணவர்களின் பெற்றோர் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைகழக உறுப்பு கல்லூரியில், பல்கலைகழக பதிவாளர் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், ஆசிரியர்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதேபோல் வேலுடையார் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், மாணவிகள் பொங்கலிட்டனர். தொடர்ந்து கோலப்போட்டியும் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நவாமரத்துப்பட்டியில் உள்ள ஸ்ரீசாய் பாரத் கல்லூரியில், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் வைத்த மாணவ, மாணவியர், உரியடித்தல், கயிறு இழுத்தல் போட்டிகளிலும் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவியரின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments