சபரிமலை வழக்கில் திருப்பம்...உச்சநீதிமன்றம் திடீர் உத்தரவு...!

0 737

சபரிமலை வழக்கு தொடர்பான , சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கோவில், மசூதி போன்ற வழிபாட்டு தலங்களுக்குள் பெண்கள் நுழைவது வழிபாட்டு  முறைகளுடன் சேர்ந்த விஷயமா என்பதை விசாரிக்க உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பது இல்லை என்ற நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை எதிர்த்து 60-க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, மேல்முறையீட்டு வழக்கை 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது,  ‘இது வெறும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விஷயம் அல்ல என்று தலைமை நீதிபதி கூறினார். சபரிமலை கோவில் பிரச்சனையில் நவம்பர் 14 ம் தேதி 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு எழுப்பிய கேள்விகளை மட்டுமே விசாரிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அனைத்து மதத்திலும் இருக்க கூடிய விஷயங்களையும் விசாரிக்க உள்ளதாகவும், சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். கோவில், மசூதி போன்ற வழிபாட்டு தலங்களுக்குள் பெண்கள் நுழைவது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா என்பதை விசாரிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, 5 நீதிபதிகள் அமர்வில் எழுப்பப்பட்ட கேள்விகளை மட்டுமே விசாரிக்க உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தேவையில்லாத வாதங்களை கேட்டுக்கொண்டிருக்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், வழக்கில் வாதாடும் வழக்கறிஞர்களை அழைத்து, வருகிற 17ஆம் தேதி, உச்சநீதிமன்ற பதிவாளர் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அப்போது, யார், யார் என்னென்ன வாதாடப் போகிறார்கள் என்பதையும், எவ்வளவு நேரம் வாதாடப் போகிறார்கள் என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகள் குறித்து அனைத்து தரப்பும் பதில் அளிக்க 3 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் வழக்கை 3 வாரத்திற்கு அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments