பொங்கல் விழா..உற்சாக கொண்டாட்டம்..!

0 463

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி ராஜ்நிவாசில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாட்டு வண்டியில் வந்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆளுநர் மாளிகை அதிகாரிகளுடன் சேர்ந்து, கிரண்பேடி பொங்கல் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டார். அதைதொடர்ந்து, விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு தமிழர்களின் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியின் சார்பாக, மாணவ மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவை கொண்டாடினர். கரகாட்டம்,ஒயிலாட்டம்,தப்பாட்டம், போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மாணவிகள் மேளதாளம் முழங்க முளைப்பாரி எடுத்துவர மாணவர்கள் பொய்க்கால் குதிரை, புலி வேடமிட்டும் ஆடி வந்தனர்.

 விழுப்புரத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் ஆசிரியர்கள், மாணவிகள் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். மாணவிகளுக்கான கோலப்போட்டிகள், கிராமிய நடனப்போட்டிகள் போன்றவையும் நடைபெற்றன. இங்கு பயின்று வரும் வெளிமாநில மாணவிகள் பலரும் தமிழர் திருநாளை கொண்டாடுவது, புதுவித அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்தனர்.

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் வந்து பொங்கல் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். கயிறு இழுத்தல், உறி அடித்தல் போன்றவற்றோடு நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

 செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியிலும், பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவர்களும், ஆசிரியர்களும் பாரம்பரிய உடையணிந்து வந்து பொங்கல் வைத்தனர். கயிறு இழுத்தல், உறி அடித்தல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

 நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய முறைப்படி மாணவர்கள் பானையில் பொங்கல் வைத்தனர். பம்பரம் விடுதல், கோலி, டயர் ஓட்டுதல், நெல் குத்துதல், கும்மி அடித்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.

 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா உற்சாக கொண்டாடப்பட்டது. மாணவ-மாணவியர் சேர்ந்து பொங்கல் வைத்ததோடு, உறியடித்தும் இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் வலம் வந்தும், பறையடித்தும் வெகுவிமரிசையாக கொண்டாடினர்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து பொங்கலை கொண்டாடினர். மேலும் கும்மியடித்து சிலம்பாட்டம்,கரகாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் ஆகியவைகளையும் மாணவிகள் ஆடினர்.

சென்னை லயோலா கல்லூரியில் பொங்கலையொட்டி வீதி விருது விழா நடைபெற்றது. இதில் கலைக்குழுவினரும், மாணவ மாணவியரும் கலைநிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர்.

திரைப்பட இயக்குநர் சேரன் மற்றும் திரளான பொதுமக்கள் நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments