4 சில்லரை திருடர்களும் நல்லா இருந்த கடையும்..! பெண்களே உஷார்

0 1193

சென்னையில் மதிய வேளையில், பெண்கள் தனியாக இருக்கும் மளிகைக் கடைகளை குறிவைத்து பணம் கொடுக்காமல், கொடுத்தது போல குழப்பத்தை ஏற்படுத்தி, மளிகை பொருட்களையும், கொடுக்காத பணத்திற்கு மீதி சில்லரையையும் வாங்கிச்செல்லும் திருட்டு கும்பல் ஒன்று தொடர் கைவரிசை காட்டிவருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கம் மேட்டுத் தெருவில் மளிகைக் கடை நடத்தி வருபவர் சம்சுதீன். சம்பவத்தன்று மதியம் இவர் பொருட்களை வாங்குவதற்கு பாரிமுனைக்கு சென்றுவிட்ட நிலையில், கடையில் அவரது மனைவியும் இரு பெண் ஊழியர்களும் இருந்துள்ளனர்.

கடைக்கார பெண்மணி செல்போனை பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த வெள்ளை சட்டை அணிந்த நபர் ஒருவர் 500 ரூபாயைக் கொடுத்து 60 ரூபாய்க்கு 4 சோப்புகள் வாங்கிய நிலையில், அவருக்கு மீதித் தொகையை கொடுத்து கொண்டிருக்கும் போதே, 2வதாக வெள்ளை சட்டை ஆசாமி ஒருவன் கையில் 500 ரூபாயை நீட்டியபடியே தனக்கு ஒரு கிலோ கோதுமை மாவு வேண்டும் என்று கூறியுள்ளான்.

கோதுமை மாவு கொடுத்து விட்டு 500 ரூபாயை வங்குவதற்குள்ளாக முதலில் மீதி சில்லரை பெற்ற நபர் தனக்கு தரப்பட்ட சில்லரையில் 200 ரூபாய் ஒன்று கிழிந்திருப்பதாகக் கூறி திருப்பி கொடுத்துள்ளான். அதை வாங்கிக் கொண்டு கடைக்கார பெண்மணி வேறு ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.

அப்போதும் இரண்டாம் நபர் 500 ரூபாய் நோட்டை நீட்டிக் கொண்டு இருந்துள்ளான். அதனை வாங்க எத்தனிக்கும் போது முதலாம் நபர் தன்னிடம் உள்ள மற்றொரு 200 ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளான்.

உடனே அவர் சில்லரையை எடுத்துக் கொடுக்கும் நேரத்தில் 2 வது நபர் தன்னிடம் இருந்த 500 ரூபாய் நோட்டை அருகில் நின்ற மற்றொரு நபரிடம் கொடுத்து அனுப்பிவிட்டு கடைக்கார பெண்மணியிடம் 500 ரூபாய் வாங்கி போட்டீர்களே சில்லரையை கொடுங்கள் என்று கேட்டு குழப்பியுள்ளான்.

பணம் வாங்கினோமா ? என்ற ஐயத்தில் ஒரு கிலோ கோதுமை மாவுக்கான 50 ரூபாய் போக மீதம் 450 ரூபாயை கொடுத்துள்ளார் அந்த பெண்மணி. அப்போது முதலாம் நபர் அங்கிருந்து நழுவ, 3 வதாக ஒரு நபர் வந்து 2000 ரூபாய் நோட்டை நீட்டியபடியே 10 கிலோ கோதுமை மாவு வேண்டும் என கேட்டுள்ளார்.

கடையின் பெண் ஊழியர் அந்த மாவு பாக்கெட்டை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, கடைக்கார பெண்மணி 2,000 ரூபாயை வாங்க முயன்றபோது 2 வது நபர் தனக்கு கொடுக்கப்பட்ட சில்லரையில் 50 ரூபாய் கிழிந்திருப்பதாக கூறி திருப்பி கொடுத்துள்ளான். அதை வாங்கிக் கொண்டு வேறு 50 ரூபாயை கொடுத்துள்ளார் அந்த பெண்மணி.

அதற்குள் 2000 ரூபாய் நோட்டை அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கைமாற்றிவிட்ட அந்த 3வது நபர் கடைக்கார பெண்மணியிடம் மீதி சில்லரை கேட்டுள்ளார்.

அவரும் 2 ஆயிரம் ரூபாய் வாங்கி கல்லாவில் போட்டதை மறந்து விட்டோமோ என்ற அய்யத்தில் அவருக்கு 10 கிலோ கோதுமை மாவுடன் மீதித்தொகையாக 1500 ரூபாயைக் கொடுத்துள்ளார்.

அந்த 3 பேருடன் வந்த 4 வது நபர் 100 ரூபாயை கொடுத்து 4 காப்பித்தூள் பாக்கெட்டுகள் மட்டும் வாங்கிக் கொண்டு சரியான சில்லரையை வாங்கிச்சென்றுள்ளான். அவன் சென்ற பின்னர் கடுமையான குழப்பத்தில் இருந்த கடைக்கார பெண்மணி, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இந்த 4 சில்லரை திருடர்களும் கைவரிசை காட்டியது உறுதியானது.

இதையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொகை சிறிது தான் என்றாலும் பல கடைகளில் செல்போன் பார்த்துக்கொண்டோ அல்லது டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டோ இருக்கும் பெண்களை குறிவைத்து இது போல கைவரிசை காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .

அதிலும் குறிப்பாக இந்த கும்பல் சென்னை புறநகரில் மதிய வேளையில் மளிகை கடைகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் பேசிக் கொண்டே பொருட்கள் வாங்குவது போல நடித்து இதுபோன்ற சில்லரை மோசடியில் ஈடுபட்டு பணத்தை வாங்கிச்செல்வதாக கூறப்படுவதால் மளிகை கடையில் தனியாக இருக்கும் பெண்கள் உஷாராக இருக்கும்படி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments