கத்தி துப்பாக்கி வெடிகுண்டுடன் சுற்றும் தீவிரவாதிகள்..! உஷார் நிலையில் போலீஸ்

0 538

தமிழகத்திற்குள் புகுந்து சிறப்பு காவல் ஆய்வாளரை சுட்டுக் கொன்று விட்டு தப்பிய இரு பயங்கரவாதிகளும் கையில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதால், முன் எச்சரிக்கையுடன் தேடுதல் பணியில் ஈடுபடும்படி காவல்துறையின் 10 தனிப்படையினரும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை அணுகு சாலை சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாதிகள் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த அம்பத்தூரில் இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் கொலை வழக்கில் சிக்கி, நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தலைமறைவாகி நேபாளம் தப்பிச்சென்று, அங்கு 14 பேராக கூட்டுச் சேர்ந்து தீவிரவாத அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் மீண்டும் கொலைகார நாசவேலை சதியுடன் இந்தியாவிற்குள் நுழைந்ததாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதில் 3 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் மூன்று பேர் பெங்களூரில் சிக்கினர்.

தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனிடம் சிக்கிய இரு தீவிரவாதிகள் அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக கொடூரமாக சுட்டுக் கொன்றிருக்கலாம் என தகவல் வெளியான நிலையில், ஹல் ஹந்த் என்ற தங்களது தீவிரவாத அமைப்பின் பெயர் நாடு முழுவதும் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தமிழக காவல்துறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில், இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தி இருக்க கூடும் என்று கூறப்படும் நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்துவிட்டு மசூதிக்குள் ஓடிய இருவரின் உருவங்களும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெளிவாக அடையாளம் காணப்பட்டது.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள அப்துல் சமீம், தவுபீக் என்பதும் அவர்கள் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களை பிடிக்க கேரள மற்றும் தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக காவல்துறையில் இருந்து 10 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தப்பிச்சென்ற தீவிரவாதிகள் இருவரிடமும், கத்தி, துப்பாக்கி, வெடிகுண்டுகள் இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதால் அவர்களை பிடிக்கச் செல்லும்போது அவர்கள் தாக்கினால் அதனை எதிர்கொள்ளும் வகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் போலீஸை தாக்க தீவிரவாதிகள் முயன்றால் அவர்களை சுட்டுபிடிக்கவும் தயாராக இருக்கும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் தொடர் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ள காவல்துறையினர் சந்தேகத்துக்கு இடமான வகையில் உலவும் நபர்கள் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கிடையே சந்தேகத்துக்கு இடமான 3 நபர்களை கேரள காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கொலைகார தீவிரவாதிகளுக்கு போலீசார் விரைவில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments