பெண்ணை கத்தியால் வெட்டிய உறவினர் - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

0 344

கோவை மாவட்டம் துடியலூர் அருகே பட்டப்பகலில் இளம்பெண்ணை கத்தியால் வெட்டிய அவரது உறவினரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் துரைராஜ். அவரது மனைவியின் அக்காள் மகளான மாது என்ற இளம்பெண்ணும் உடன் வசித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திறனாளி ஒருவரை திருமணம் செய்து கொண்ட மாது, பின்னர் மாமியார் கொடுமை செய்வதாக கூறி கணவரை விட்டு பிரிந்தார். அதன் பிறகு துரைராஜின் வீட்டிலேயே தங்கியும் வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஐந்து சவரன் நகைகளுடன் மாது மாயமாகியுள்ளார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ராஜபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாது பல ஆண் நண்பர்களுடன் நெருக்கமான பழக்கம் இருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் துரைராஜ் மாதுவின் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் துடியலூர் அடுத்த வி.எஸ்.கே நகரில் மாது தங்கி இருப்பதாகவும், தினமும் காலையில் அங்கிருக்கும் பேருந்து நிலையத்திற்கு வருவதாகவும் துரைராஜிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் புதன்கிழமை இரவு ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்ட அவர், கோவைக்கு சென்று வி.எஸ்.கே நகர் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்துள்ளார்.

காலையில் பேருந்து நிலையத்திற்கு வந்த மாதுவை கண்ட அவர், மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் அவரது தோள்பட்டை கை ஆகிய இடங்களில் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் துரைராஜை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து சென்ற துடியலூர் போலீசார் துரைராஜை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர்.

இதற்கிடையே வலியால் அலறித்துடித்த மாது மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் அழைத்துச் சென்ற போது சாவகாசமாக நடந்தவற்றை செல்போன் மூலம் மனைவியிடம் கூறிய துரைராஜ், துரோகம் செய்தால் பரவாயில்லை நம்பிக்கை துரோகம் செய்தால் இது தான் கதி எனகூறியது அங்கிருந்தவர்களை அதிரவைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments