வளைய சூரிய கிரகணம்...

0 165

வானில் நிகழும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் மூன்றரை மணி நேரம் நீடித்தது. நாடு முழுவதும் பல ஊர்களில் தெரிந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின் அழகை மக்கள் ரசித்து பார்த்தனர்.

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு வரும் போதும் மூன்றும் ஒரே நேர்கோட்டில் தோன்றுவதே சூரிய கிரகணமாகும். சூரிய கிரகணத்தின்போது நிலவின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்து விட்டால் அது முழு சூரிய கிரகணம் ஆகும். சந்திரனால் ஒரு பகுதி சூரியனை மட்டுமே மறைக்க முடிந்தால் அது பகுதி சூரிய கிரகணம் ஆகும். சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. இதன் காரணமாக சில சமயம் பூமிக்கு அருகிலும், சில சமயம் பூமிக்கு தொலைவிலும் வந்து செல்லும்.

பூமிக்கு அருகில் நிலா சுற்றிவரும்போது ஏற்படும் கிரகணம் முழு சூரிய கிரகணமாக இருக்கும். அதே சமயத்தில் பூமியில் இருந்து நீண்ட தொலைவில் சந்திரன் இருக்கும்போது ஏற்படும் கிரகணம் நெருப்பு வளைய சூரிய கிரகணமாக மாறிவிடும். சந்திரனின் நிழல் சூரியனை முழுமையாக மறைக்க முடியாமல் நெருப்பு வளையம் உண்டாகும்.

வானில் அரிதாக நிகழும் இந்த அற்புத நிகழ்வு 32 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. முதலில் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் இந்த கிரகணம் தெரியத் தொடங்கியது. தமிழ்நாட்டில் நேற்று காலை 8.08 மணி அளவில் சூரிய கிரகணம் தொடங்கியது. முதலில் ஊட்டியில் சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது. இதைத்தொடர்ந்து மதுரை, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது.

சுமார் மூன்று நிமிடங்களுக்கு சூரியன் நெருப்பு வளையமாக காட்சி அளித்து கண்களுக்கு விருந்து படைத்தது.
இந்த காட்சியை மக்கள் கண்டு களித்தனர். சென்னையில் பிர்லா கோளரங்கத்தில் சூரிய கிரகணத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு ஏராளமானவர்கள் சூரிய கிரகணத்தை கண்டு களித்தனர்.

கோவை

கோவை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் அங்கு சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை. இதேபோல ஈரோடு உள்ளிட்ட சில இடங்களில் சூரிய கிரகணம் முழுமையாக தெரியவில்லை. நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே 100 சதவீத நெருப்பு வளையம் தெள்ளத்தெளிவாக இருந்தது.

நெல்லை

நெல்லையில் 85 சதவீதம் சூரிய கிரகண நிகழ்வை காண முடிந்தது. சேலத்தில் சரியாக காலை 8.08 மணிக்கு கிரகணம் தொடங்கியது. 9.35 மணிக்கு சூரியனை சந்திரன் மறைத்தது. அப்போது சூரியனை சுற்றியுள்ள பகுதி நெருப்பு வளையம் போல காட்சி அளித்தது.

சேலம்

கிரகணத்தை காண அறிவியல் இயக்கம் சார்பில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு சிறப்பு கண்ணாடி வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் நேற்று காலை 8.06 மணிக்கு தெரிய தொடங்கிய சூரிய கிரகணம் பகல் 11.20 மணி வரை மூன்றரை மணி நேரம் தெரிந்தது. 11.20 மணிக்கு பிறகு சூரிய கிரகணம் மெல்ல மெல்ல விலகியது.

பெங்களூரு

பெங்களூரிலும் 90 சதவீதம் சூரிய கிரகணம் காணப்பட்டது. மும்பை பகுதி மக்கள் 79 சதவீத சூரிய கிரகணத்தை பார்த்தனர்.டெல்லியில்  கடுமையான மேகமூட்டம் காரணமாக மக்களால் சூரிய கிரகணத்தை பார்க்க இயலவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் 8.39 மணி முதல் 11.45 மணி வரை பகுதி அளவு சூரிய கிரகணத்தை மக்களால் பார்க்க முடிந்தது.

இலங்கை, சிங்கப்பூர், சவுதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் சூரிய கிரகணம் தெரிந்தது. 

இதேபோன்று முழுமையான சூரிய கிரகணத்தை 2031-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி தான் பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சூரிய கிரகணம் 2020 ஜூன் 21-ந்தேதி ஏற்பட உள்ளது. இந்த சூரிய கிரகணத்தை ராஜஸ்தான், உத்தரகாண்ட், அரியானாவில் பார்க்க முடியும். தமிழகத்தில் அந்த சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்க இயலாது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments