சென்னை மெரினாவில் 900 கடைகளுக்கு அனுமதி

0 532

சென்னை மெரினா கடற்கரையில், 27 கோடி ரூபாய் செலவில், 900 வண்டிக்கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என சென்னை  மாநகராட்சி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னை மெரினா கடற்கரையில் தற்போது வரை ஆயிரத்து 962 கடைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 900 கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்க இருப்பதாகவும், அதற்காக, 27.4 கோடி ரூபாய் செலவில், 900 வண்டிக்கடைகள் அமைத்துக் கொடுக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வாகன நிறுத்தத்தை பொறுத்தவரை, 457 கார்கள், 2 ஆயிரத்து 271 இருசக்கர வாகனங்கள், 80 பேருந்துகளை நிறுத்தும் வகையில் ராணி மேரி கல்லூரி, கலங்கரை விளக்கம் உள்ளிட்டவை அருகில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மெரினாவை சுத்தப்படுத்த 175 துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், 6 இடங்களில் அதி நவீன கழிப்பிட வசதிகள் ஏற்படுத்த உள்ளதாகவும் மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலங்கரை விளக்கம் அருகில் மீன் வியாபாரிகளுக்கு 66 லட்ச ரூபாய் செலவில் 300 மீன் விற்பனை கடைகள் அமைக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், உணவு பாதுகாப்பு விதிகளை மீறி செயல்படுபவர்கள், உணவு விற்பனைக்கான தர சான்று பெறாதவர்கள் மெரினாவில் கடைகள் நடத்த அனுமதிக்கவே கூடாது என எச்சரித்தனர்.

லூப் சாலையில் நடைபாதை, சைக்கிள் செல்ல பாதை  உள்ளிட்ட, மெரினா கடற்கரையை அழகுபடுத்த மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க காலஅவகாசம் வழங்கி, விசாரணையை ஜனவரி 8 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments