களைகட்டிய சுற்றுலாத்தலங்கள்..!

0 227

விடுமுறை நாளான நேற்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர் ராக், குணா குகை, கோக்கர்ஸ் வாக் போன்ற இடங்களுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை கண்டும் மேக கூட்டங்கள் பாறைகளின் மேல் தவழ்ந்து சென்ற காட்சியையும் கண்டும் ரசித்தனர்.

உதகை தாவரவியல் பூங்காவிற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மிதமான வெயில் மற்றும் சில்லென வீசும் காற்றை அவர்கள் அனுபவித்து மகிழ்ந்தனர். தற்போது கோடை சீசனுக்காக பூங்கா தயாராகி வருவதால் மலர்கள் குறைவாகவே காணப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து குளித்து மகிழ்ந்தனர்.

சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், படகு குழாம், குமரி முக்கடல் சங்கமம், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் திரண்டிருந்தனர்.

குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடனும், ஆனந்தத்துடனும் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் குற்றால அருவி போல தண்ணீர் கொட்டுவதால் திரளான மக்கள் இங்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணத்துக்கும் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்திற்கு ஆகாளாயினர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் நேற்று அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் திரண்டனர். கடல்சீற்றம் காரணமாக அரிச்சல் முனைக்குச் செல்ல நவம்பர் 19ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடிக்கு வந்த சுற்றுலாப்பயணிகள், தடைகளை மீறி ஆர்வமிகுதியால் அரிச்சல்முனைக்குச் சென்றதுடன், அங்கு அபாயமுள்ள பகுதிகளில் நின்று செல்பி எடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments