நல்வாழ்வு முகாமில் மகிழ்வித்து மகிழும் யானைகள்

0 136


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் துவங்கியுள்ள 12வது யானைகள் புத்துணர்வு முகாமுக்கு தமிழகத்தின் பல்வேறு கோவில்கள், மடங்களில் இருந்து வருகை தந்துள்ள யானைகள் மௌத் ஆர்கன் வாசித்தும், கால்பந்து விளையாடியும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கான 12 வது சிறப்பு நலவாழ்வு, புத்துணர்வு முகாம் கோவை - மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டியில் துவங்கியது.

சிறப்புப் பூஜைகளுக்குப் பின் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி முகாமினை துவக்கி வைத்தார். 48 நாட்கள் நடைபெறவுள்ள இந்த முகாமில், 23 கோவில் யானைகள், திருமடங்களை சேர்ந்த 5 யானைகள் என மொத்தம் 28 யானைகள் கலந்துகொள்கின்றன.

யானைகளுக்கு பசுந்தீவனங்கள், பாசிப்பயிறு, கொள்ளு, அரிசி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும். தினமும் நடைபயிற்சி, ஷவர் குளியல், மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படவுள்ளன.

முகாமுக்கு அழைத்துவரப்பட்ட யானைகள் குளிப்பாட்டப்பட்டு, அவற்றின் நெற்றியில் திருநீற்றுப் பட்டையும் திருநாமமும் இடப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. இயற்கை எழில் சூழ்ந்த பவானி ஆற்றுபடுகையில் புத்துணர்வு முகாமுக்கு வந்துள்ள யானைகள் ஒன்றையொன்று சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டன.

யானைகளை முகாமுக்கு அழைத்து வருவதன் மூலம் அவைகளின் உடல் எடை, உணவுப் பழக்கவழக்கம், பராமரிப்பு முறை உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆலோசனைகளை பெற முடிகிறது என பாகன்கள் கூறுகின்றனர்.

யானைகள் மௌத் ஆர்கன் வாசிப்பதையும், கால்பந்து விளையாடுவதையும் அங்கு வந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

ஜனவரி 31ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறவுள்ள நிலையில், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகாம் நடக்கும் பகுதியில் காட்டு யானைகளின் வருகையைத் தடுக்க மின்வேலி மற்றும் தகரஷீட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பாகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments