பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட்டு வீக்..! அதிகரிக்கும் கிட்னி பாதிப்பு

0 521

தமிழகத்தில் அண்மை காலமாக கிட்னி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உடலில் சிக்ஸ் பேக் வடிவமைப்பு வருவதற்காக ஊட்டசத்து பவுடரை தன்னிச்சையாக எடுத்துக் கொண்ட பலர் கிட்னி பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் கிட்னி பாதிப்பால் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மாதம் இருமுறை டயாலிசிஸ் செய்து கொள்வதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கின்றது.

அதிகமாக கிட்னி பாதிப்புக்குள்ளானோர் பட்டியலில் தமிழகம் 2 வது இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கிட்னி நோயாளிகள் பெருகிவருவதாக மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக 90 சதவீதம், பெண்கள் தான் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

பெண்களுக்கு முடி உதிர்தல், தூக்கமின்மை, கண்ணுக்கு கீழ் சுருக்கம், கை கால் வீங்குதல், மூட்டு வலி, மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு, தலைவலி, ரத்தசோகை போன்றவை கிட்னி பாதிப்புக்கான அறிகுறிகளாக மருத்துவர்கள் சுட்டிக்கட்டுகின்றனர்.

15 வயதில் இருந்து 45 வயதுள்ள பெரும்பாலான பெண்கள் அடிக்கடி தலைவலி வந்தால் தலைவலி கிரீம்களை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் அவர்கள் அதனை விடுத்து வருடத்திற்கு இருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று அறிவுறுத்துகின்றனர்.

பெண்களுக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட முக்கிய காரணமாக உடல் பருமன், கட்டுப்பாடில்லா உணவு, அதிக உப்புசத்துள்ள நொறுக்குத்தீனி வகைகளை உண்பது ஆகியவை சுட்டிகாட்டப்படுகின்றது. டி.வி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது, ஓட்டலில் வண்ணக்கலவை பயன்படுத்தப்பட்ட சிக்கன் வகைகளை சாப்பிடுவது போன்றவை தொடர்ந்தால் கிட்னி எளிதாக பாதிப்படையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

அதே நேரத்தில் ஆண்களில் தொடர்ந்து மது அருந்தும் நபர்கள், உணவு கட்டுப்பாடில்லா நபர்கள் மற்றும் உடலை வலுவாக்க உடற்பயிற்சி செய்வதாகக் கூறி சிக்ஸ் பேக் முயற்சிக்காக கிரியாட்டின் என்ற ஊட்டச் சத்து பொடியை அதிகமாக உட்கொள்ளும் நபர்களின் கிட்னியும் பாதிப்புக்குள்ளாவது அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது

தகுதியான உடற்பயிற்சியாளரின் அறிவுரைப்படி குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொண்டால் பாதிப்பு வராது உடற்பயிற்சி மையத்துக்கு சென்ற ரெண்டு நாட்களில் உடல் பழனி படிக்கட்டு போல அமையவேண்டும் என்று நினைத்து அதிக கிரியாட்டின் உட்கொண்டால் அது கிட்னியை செயல் இழக்க செய்யும் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆண்களுக்கு அடிக்கடி சிறுநீர் வந்தாலும், சிறுநீர் குறைவாக வந்தாலும் சிக்கல் தான். உடலில் சர்க்கரையின் அளவும், உப்புச்சத்தும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயுள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். முறையான கால நேரம் இன்றி கட்டுப்பாடற்ற உணவு பழக்கவழக்கம், உடல்பருமன், சோடா மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது ஆகியவை மெல்ல மெல்ல கிட்னியை செயலிழக்கச் செய்துவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு 5 மில்லி கிராமுக்கு அதிகமாக உப்பு எடுத்துக் கொள்ளகூடாது. உடலுக்கு வலு ஏற்றுவதாக நினைத்து நிறமேற்றப்பட்ட கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன் போன்றவற்றை கடைகளில் தொடர்ந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எந்த ஒரு உணவையும் வீட்டில் தயாரித்து சாப்பிடுவதே நலம் பயக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சீரான உணவு பழக்கவழக்கம், முறையான உடற்பயிற்சி, தினமும் நடைபயிற்சி, உயரத்திற்கேற்ற எடை என்று உணவு கட்டுப்பாட்டுடன் இருந்தால் கிட்னியை காத்துக்கொள்வதோடு நாமும் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments