ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு

0 210

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டி போட்டு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடக்கிறது. கடந்த 9-ந்தேதி மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில், ஆறு நாட்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் பகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் போன்றவற்றை அறிவித்து உள்ளதால் வேட்புமனுத்தாக்கல் நேற்று சூடுபிடித்தது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை இறுதி நாள் என்பதால் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனுவை திரும்பப்பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

அதிமுக 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக சார்பில், 17 கட்சி மாவட்டங்களில் போட்டியிடும், 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை, அக்கட்சி வெளியிட்டிருக்கிறது.

இதுதொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு, தஞ்சாவூர் வடக்கு மற்றும் தெற்கு, திருச்சி மாநகர் மற்றும் புறநகர், நாமக்கல், பெரம்பலூர், உள்ளிட்ட கட்சி மாவட்டங்களில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை புறநகர் மேற்கு, தூத்துக்குடி தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கரூர், நாகப்பட்டினம் ஆகிய கட்சி மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

திமுக

இதனிடையே, திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்தாலோசனை அந்தந்த மாவட்ட திமுக சார்பில் நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை, திருச்சி, கரூர், சேலம், கோவை, நீலகிரி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து சுமுக முடிவெடுக்கப்பட்டு, தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடு, அந்தந்த மாவட்டக் கழகங்களின் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கூட்டணிக் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தி.மு.க. தலைமை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments