தமிழகம் முழுவதும் அதிகாலை முதல் பரவலாக மழை

0 453

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. 

திருச்சி மாநகரில் சத்திரம் பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையம், உறையூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், அதேபோல் புற நகர் பகுதிகளான துறையூர், திருவெறும்பூர், சமயபுரம் டோல்கேட், பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

கரூர் நகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான மாயனூர், வெள்ளியணை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான காணை, நன்னாடு, ஜானகிபுரம், பில்லூர், முண்டியம்பாக்கம், சாலாமேடு, கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், அதிகாலை முதல் கன மழை பெய்தது. நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், 8 மணியளவில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யத்துவங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பள்ளி செல்லும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவர்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவிலிமேடு, ஓரிக்கை, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் காலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்ததால், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

கடலூரில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் பலத்த மழை பெய்தது. அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்படக் கூடும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சென்னையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், தியாகராயநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் பரவலாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

சேலம் மாநகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் காலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. அதேபோல் ஏற்காட்டிலும் காலை முதல் பரவலாக மழை பெய்தது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் 2ஆவது நாளாக கனமழை பெய்து வருவதால், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. திருப்பூண்டியில், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே, மிதமான சாரல் மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது. இதனால், அப்பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

 

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments