மூதாட்டியை கொன்றவனை அடித்து கொலை செய்த பொதுமக்கள்

0 549

நாமக்கல் அருகே மூதாட்டியை ஆசிட் வீசியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தவன், பொதுமக்கள் மீதும் ஆசிட் வீசி தப்ப முயன்றதால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி தனம். இவரது மருமகள் விஜயா. கணவரை இழந்தவரான விஜயாவுக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில் விஜயாவுக்கும் தர்மபுரியை சேர்ந்த சாமுவேல் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தருமபுரியில் வசித்து வந்துள்ளனர். இதை விரும்பாத விஜயாவின் மகள் பாட்டியுடனேயே தங்கி இருந்துள்ளார். இதனிடையே சாமுவேல் விஜயாவின் மகளை தவறான கண்ணோட்டத்துடன் அணுகியதாக கூறப்படுகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்ததால் தனம் வீட்டுக்கு ஆசிட் மற்றும் கத்தியுடன் வந்த சாமுவேல், விஜயாவின் மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறி மிரட்டியதுடன், கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதுடன் போலீசாரும் தகவல் கிடைத்து விரைந்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சாமுவேல், தனம் மீது ஆசிட் வீசியும், கத்தியால் குத்தியும் கொலை செய்ததுடன், வீடு முன் திரண்டிருந்த பொதுமக்கள் மீதும் ஆசிட் வீசியுள்ளான்.

இதில் 10 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததால் அவர்கள் உருட்டு கட்டையால் சாமுவேலை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

ஆசிட் வீச்சில் 3 போலீசாரும் காயம் அடைந்தனர். அவர்களில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகானந்தம், தலைமை காவலர் கார்த்தி ஆகியோருக்கு கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றவர்கள் ராசிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments