3 குழந்தைகளோடு தம்பதி தற்கொலை.. 3 நம்பர் லாட்டரியை நம்பி மாண்ட பரிதாபம்

0 592

விழுப்புரத்தில் நகை தொழிலாளி குடும்பத்துடன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்குக் காரணமானதாகக் கூறப்படும் சட்டவிரோத லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகரில் மனைவி சிவகாமி மற்றும் பிரியதர்ஷினி, யுவஸ்ரீ, பாரதி என 3 பெண்குழந்தைகளோடு வசித்து வந்தவர் அருண். நகைப்பட்டறை வைத்து தொழில் நடத்தி வந்த அருணுக்கு ஆரம்ப காலத்தில் நல்ல வருமானம் கிடைத்துள்ளது. 30 லட்ச ரூபாய்க்கு சொந்தமாக வீட்டைக் கட்டி சந்தோஷமாக வாழ்ந்து வந்தவர் தொழிலில் நட்டம் ஏற்பட்டு, குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

அந்த குடிப்பழக்கம், அவருக்கு வந்துகொண்டிருந்த கொஞ்சநஞ்ச வருமானத்துக்கும் முட்டுக்கட்டைப் போட, கடன் சுமை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன் விளைவாக ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை விற்றுவிட்டு, வாடகை வீட்டுக்குக் குடிவந்துள்ளார் அருண்.

எப்படியாவது கடன் சுமையிலிருந்து மீண்டு, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என எண்ணியவருக்கு, குடிகார நண்பர்களால் அறிமுகம் ஆகியிருக்கிறது, இந்த 3ஆம் நம்பர் லாட்டரி. குடிபோதையோடு இந்த லாட்டரி போதையும் சேர்ந்துகொள்ள, அதனை ஏகபோகமாக வாங்கி, மேலும் கடனாளி ஆகியிருக்கிறார் அருண்.

ஒரு கட்டத்தில் இனி மீளவே முடியாது என்ற மனநிலைக்கு வந்தவருக்கு 3 பெண் குழந்தைகளின் எதிர்காலமும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஒரு வார காலமாகவே இந்தப் பிரச்சனைகள் குறித்து புலம்பியவாறே இருந்ததாகக் கூறுகின்றனர் நண்பர்கள்.

சம்பவத்தன்று நகைகளை பாலிஷ் செய்யப் பயன்படுத்தும் சையனைடு விஷத்தை 3 பெண் குழந்தைகளுக்கும் முதலில் கொடுத்துள்ளனர் தம்பதியர். விஷத்தை அருந்திய அந்தக் குழந்தைகள் துடிதுடித்து இறந்ததை தனது செல்போனில் படம் பிடித்திருக்கிறார் அருண். அந்தக் காட்சிகள் காண்போரின் மனதை உலுக்குவதாக உள்ளன.

குழந்தைகள் ஒவ்வொன்றாக மயக்க நிலைக்குச் செல்ல, தனது இந்த முடிவுக்குக் காரணம் என்ன என்பதை விளக்கி ஒரு வீடியோவை எடுத்திருக்கிறார் அருண். “3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டேன், நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்ச நேரத்தில் விஷமருந்தி சாகப் போகிறோம்” என்று அதில் கூறும் அருண், விழுப்புரத்தில் லாட்டரி சீட்டை ஒழித்துவிடுமாறும் கூறுகிறார்.

அவரது இந்த வீடியோக்கள் வாட்சப்பில் பரவ, பதறிக்கொண்டு உறவினர்கள் ஓடி வந்து 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு 5 பேருமே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் போலீசார், முதற்கட்டமாக சட்டவிரோத லாட்டரிகளை விற்பனை செய்த 13 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கோலியனூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் சி.வி. சண்முகம், சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பறிபோன இந்த 5 உயிர்களே கடைசியாக இருக்கட்டும் என்று கூறும் விழுப்புரம் மக்கள், சட்டவிரோத லாட்டரி விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் கடுமையான தண்டனை உள்ளாவார்கள் என்றும், அவர்களது செயல்களுக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கைகள் பாயும் என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments