எஸ்.வி.சேகருக்கு கைலாசாவில் பிரதமர் பதவி..! நித்திக்கு திடீர் நிபந்தனை

0 1098

பாலியல் வழக்கில் தேடப்படும் நித்தியானந்தா, பிரச்சனைகள் தீர்ந்து கைலாசா நாடு அமைத்ததும் அதற்கு தன்னை பிரதமராக்கினால், தான் மட்டும் தனியாக வருவதாக எஸ்.வி.சேகர் திடீர் நிபந்தனை வித்துள்ளார். மேலும் காவி உடை அணிந்த திருவள்ளுவர் காலண்டரை வெளியிடுவதற்காக 1 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

4500 மேடை நாடகங்களில் நடித்துள்ள திறமையான நாடக நடிகர் மற்றும் கதாசிரியர் எஸ்.வி.சேகர்.

ஒரு கல்லூரி நிகழ்ச்சியிலோ அல்லது விழாக்களிலோ பங்கேற்று மேடையில் பேசுவதற்கு சராசரியாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டால் மட்டுமே தனது கருத்துக்களை தெரிவிப்பது எஸ்.வி சேகரின் வழக்கம்.

தனது நண்பர் ஒருவரிடம் 1 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு காவி உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற காலண்டர்களை அச்சிட்டுள்ள எஸ்.வி சேகர், தன்னை இ.மெயில் மூலம் தொடர்பு கொண்டால் காலண்டரை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் பாலியல் வழக்கில் அகமதாபாத் மற்றும் பெங்களூரு காவல்துறையினரால் தேடப்படும் நித்தியானந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து கடந்த இரு தினங்களாக வீடியோ வெளியிட்டு வருகின்றார்.

ஓரின சேர்க்கை, முறையற்ற சரீர உறவு உள்ளிட்ட 11 விதமான பாலியல் நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்படும் என்று ஐ. நா கடிதத்தில் நித்தி சுட்டிக்காட்டியிருந்த விபரம் தெரியாமல், கைலாசாவுக்கு நித்தியானந்தா டிக்கெட் அனுப்பி வைத்தால் குடும்பத்துடன் சென்றுவருவேன் என்று அறிவித்திருந்த நாடக நடிகர் எஸ்.வி.சேகர், தனது முடிவில் இருந்து சற்று பின்வாங்கியுள்ளார்.

தனக்கு மனைவி, குழந்தைகள் பேரன், பேத்தி இருப்பதால் கைலாசாவுக்கு தனியாக வந்து செல்வதாக உறுதி அளித்துள்ள, எஸ்.வி.சேகர் தன்னை கைலாசாவுக்கு பிரதமர் ஆக்கினால் அவ்வப்போது வந்து செல்வேன் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

நாம் கையால் தொடும் பொருளை பொறுத்து தான் நமது கை மனம் வீசுவதும், நாற்றம் வீசுவதும் என்று நித்தியானந்தா மீதான தனது பார்வை குறித்து விளக்கி உள்ளார்.

தனது இந்த பணிகள் பிடித்து இருந்தால் தனது அறக்கட்டளைக்கு பணம் அனுப்பி வைக்கலாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் நாடக நடிகர் எஸ்.வி.சேகர்.

அதே நேரத்தில் நித்தியானந்தாவுக்கு ஆதரவாக பேச தான் பணம் ஏதும் வாங்கவில்லை என்று எஸ்.வி சேகர் கூறியிருப்பது குறிப்பிடதக்கது.

நித்தியின் கைலாசா நாட்டின் பிரதமர் பதவிக்கு முன்கூட்டியே துண்டு போட்டு வைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்க, நித்தி எங்கு உள்ளார் ? என்பதை வருகிற 18 ந்தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யும்படி கர்நாடக அரசுக்கும், காவல்துறைக்கும் பெங்களூரு நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments