மாமல்லபுரத்தை அழகுபடுத்தி நிரந்தரமாக பாதுகாக்கக் கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

0 165

மாமல்லபுரத்தை அழகுபடுத்தி நிரந்தரமாக பாதுகாக்கக் கோரிய வழக்கில் ஜனவரி 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடுமென உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி கிருபாகரன் நவம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்டவற்றில் லைட்டிங் ஷோ-விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

புராதான சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டிடங்களை அனுமதிக்க கூடாது, குப்பை போடுவதை குற்றமாக்கி குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும், சீன அதிபர் வருகையின் போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை அவர் வழங்கியிருந்தார்.

அந்த கடிதத்தின் அடிப்படையில், தாமாக முன் வந்து பொது நல வழக்காக நீதிபதி வினீத் கோத்தாரி அமர்வு விசாரித்தது. நீதிபதி கிருபாகரன் அளித்த பரிந்துரைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஒதுக்கப்பட உள்ள நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதி வினீத் கோத்தாரி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.

அதை ஏற்று வழக்கை ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments