மலைகள் மிகப்பெரிய கொடையாளிகள்... அதனை மறந்து கொலை செய்து கொண்டிருக்கிறோம்...!

0 170

மலைகள் ஏறிப்பார் அது ஆயிரம் கதைகள் சொல்லும்.மரக்கிளைகள் வழியே ஊடுருவி வரும் சூரியனின் கதிர்கள் கூட இயற்கையை மெய்சிலிர்க்க வைக்கும்.தென்றல் உன்னை தாலாட்டும் இது இயற்கை ஆய்வாளரான ஜான்முயிரின் கூற்றாகும் மலைகள் அப்படி என்ன பயன்தர போகிறது என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கும்.

image

மனிதனுக்கு இரு கண்கள் எப்படியோ அதேபோல் இயற்கைக்கு மரமும் மலையும் இவ்விரண்டும் தருகின்ற பரிசு தான் மழை .ஆறுகளின் பிறப்பிடம்,மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமும்,காட்டுயிரிகளின் உலகம் அனைத்துமே மலைகளும் அதனை சுற்றியுள்ள இடங்கள் தான்.மலைகளையும்,மலைபிரதேசங்களையும் பாதுகாக்க ஐ.நா பொதுசபை 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் நாளை மலைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளது.அதை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு இந்த நாளை யுனஸ்கோவும் சர்வதேச மலைகள் தினமாக அறிவித்து அதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறது

மலைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?

மலைகள் என்றால் வெறும் வனவிலங்குகள் வசிக்கும் பகுதியாகவோ அல்லது அதனை சார்ந்து வாழும் மக்கள் பகுதியாக மட்டும் தான் நினைத்து கொண்டிருக்கிறோம்.ஆனால் உலகத்தில் இன்னும் வெளிஉலகம் அறியாத மக்கள் அங்கு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.40 சதவீதத்திற்கு மேல் இன்னும் உணவுக்காக மலைகளை தான் நம்பி உள்ளார்கள்.

மனிதனின் அத்தியாவசியமான தண்ணீர் பிரச்சனையை 75 சதவீதம் பூர்த்தி செய்கிறது.அது மட்டுமா தீர்க்க முடியாத நோய்களுக்கு கூட தீர்வாக மூலிகை மருந்துகள் அங்கு இருந்து தான் கிடைக்கப்பெறுகிறது.

இந்தியாவில் தொடராகவும்,குன்றுகளாகவும்,சிறுமலைகளாகவும் இருக்கிறது.. இமயமலைக்கு அடுத்து மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு முக்கியத்துவமாக விளங்குகிறது.சமவெளிகளில் பெய்யும் மழை நீரை அருவியாகவும்,நீரோடையாகவும்,வற்றாத ஜீவ நதியாக மாற்றி தருகிறது.இது குஜராத் முதல் கன்னியாகுமரி வரை நீண்டு காணப்படுப்படுகிறது.

image

38 சிகரங்களை கொண்ட இம்மலைத்தொடரில் 50 அணைக்கட்டுகள் 126 நீர்வீழ்ச்சிகள்,6மாநிலங்கள்,6 மொழிகள் 245 மில்லியன் மக்களின் ஒரே ஒரு நீராதாரம் ஆகும். இம்மலையில் 139 வகையான பாலூட்டிகள், 508 வகையான பறவையினங்கள், 179 வகையான இருவாழ்விகள், 250 வகையான ஊர்வனங்கள், 7,402 பூக்கும் தாவரங்கள், 1,814 பூக்காத தாவரங்கள், மூலிகைச்செடிகள், 10 வகையான காட்டுத்தேனீக்கள், 6,000 வகையான பூச்சிகள், 288 வகையான மீன் வகைகள் ஆகியவற்றிற்கு அடைக்கலமாக விளங்குகிறது.அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்காற்றை தடுத்து நல்ல மழைப்பொழிவை தருகிறது.கோடைக்காலத்தில் அதிக வெப்பத்தை தரமால் தடுக்கிறது.இமயமலையை விட மிகவும் பழமையானதும் 14 தேசிய பூங்காக்கள்,44 வன உயிரி சரணாலயங்கள் ,புலிகள் காப்பகம் என பல்லுயிரிகள் வாழும் வீடாக மாறிவிட்டது.

image

எந்த இடத்தில் அதிகமாக அழகு உள்ளதோ அதே இடத்தில் அழிவும் ஏற்படுகிறது.உண்மை தான் மேற்கு தொடர்ச்சி மலையும் அழிவை சந்தித்து கொண்டு தான் இருக்கிறது.பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் காடுகளை அழிக்க தொடங்கிய நாம் மலைகளையும் அழித்து வருகிறோம். ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள், கல்லூரிகள், விடுதிகள்,  ஆன்மீக ஆசிரமங்கள் என பலவற்றை இயற்கை தாயிடமிருந்து சுரண்டிவிட்டோம்.இது மட்டுமா செய்தோம்?வனவிலங்குகளை பணத்திற்காக வேட்டையாடினோம்.பாறைகளை குடைந்து ஆராய்ச்சி கூடங்களை கட்டி இருக்கிறோம்.மனிதனின் அற்ப ஆசையால் கனிம வளங்களையும்,உயிரினங்களையும் காவு வாங்கி கொண்டு இருகிறோம்.இதன் விளைவு தான் மனித விலங்கு மோதல்.காடழிப்பு,புவி வெப்பமயமாதல் ,கால நிலை மாற்றத்தால் 20 ஆண்டுகளில் 11 சதவீதம் இயற்கை வளங்களை இழந்து இருக்கிறோம்.பணப்பயிர்களான ரப்பர், தேயிலை, காபி போன்ற பயிர்களை பயிரிட்டு ஆனைமலையில் சில பகுதிகளை பசும் பாலைவனமாக மாற்றி வைத்திருக்கிறோம். 

image

 

மலைகள் மிகப்பெரிய கொடையாளிகள்;அதனை மறந்து கொலை செய்து கொண்டிருக்கிறோம். இனி வரும் காலத்திலாவது நாம் செய்த தவறை உணர்ந்து மலைகளைக் காப்போம்.  இல்லையெனில் வருங்கால சந்ததிகளுக்கு பாலைவனத்தையே பரிசாக அளிப்போம்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments