திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.. பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா" என முழக்கம்

0 300

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில்  நடைபெற்ற மகாதீப நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று மகா தீபம் ஏற்றும் வைபவம் நடைபெற்றது. கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்காக 2 ஆயிரத்து 500 பேர் மட்டுமே மலை மீது அனுமதிக்கப்பட்ட நிலையில், கோவிலில் இருந்தவாறு மகா தீபத்தை தரிசிக்க முன் பதிவு செய்திருந்த 8 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளியதைத் தொடர்ந்து, அண்ணாமலையார்- உண்ணாமலையம்மன் சமேதராக சன்னதியில் இருந்து வெளியில் வரும் நேரத்தில் மலை மீது 200 கிலோ எடை கொண்ட ராட்சத கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கிரிவலப்பாதையிலும், சன்னதி எதிரிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் அண்ணாமலையாருக்கு அரோகரா....என்று விண்ணதிர பக்தி முழக்கமிட்டனர்.

தொடர்ந்து கோவில் கொடி மரம் எதிரிலும் தீபம் ஏற்றப்பட்டது. மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாட்களுக்கு தொடர்ந்து எரியும்.  40 கிலோமீட்டர் தூரம் வரை மகா தீப ஜோதியை தரிசிக்க முடியும். தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments