பள்ளியில் 96.. வீட்டில் 302..! பாவம் நாசமான வாழ்க்கை

0 1180

96 பட பாணியில் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பள்ளி தோழியுடன் மலர்ந்த காதலால், மனைவியை கொலை செய்து நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வீசிய கணவன், பெண்  நர்சிங் சூப்பிரண்டுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கழுத்து நெரித்து கொல்லப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடந்தது. சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் அந்த பெண் யார் ? என்பது குறித்து விசாரணையை முன்னெடுத்தனர் துப்பு துலங்கவில்லை,

இதற்கிடையே கேரள மாநிலம், கோட்டயம் அடுத்த சங்கனாசேரியை சேர்ந்த பிரேம் குமார் என்பவர் தனது மனைவி வித்யா காணாமல் போய் விட்டதாகவும், அவருக்கு வேறு சில ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் உதயம் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரது செல்போன் சிக்னலும் திருவனந்தபுரத்தில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருந்ததை கண்டறிந்த உதயம்பேரூர் போலீசார் கணவர் பிரேம்குமாரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காத பிரேம் குமார் பாபநாசம் பட பாணியில் தனது குழந்தைகளுடன் அழுது அடம் பிடித்துள்ளார். ஒரு கட்டத்தில் போலீசார் தன்னை கடுமையாக டார்ச்சர் செய்வதாக உயர் அதிகாரிகளிடம் குழந்தைகளுடன் சென்று புகார் அளித்தார்.

வித்யா பயன்படுத்திய செல்போன் இறுதியாக பீகாரில் இருப்பது போல சிக்னல் தெரிவித்த நிலையில் உண்மையிலேயே வித்யா வீட்டை விட்டு சென்றிருக்கலாம் என்று முடிவுக்கு வந்த காவல்துறையினர் வித்யா மாயமான வழக்கை கிடப்பில் போட்டனர்.

இந்த நிலையில் வள்ளியூரில் கொலை செய்து வீசப்பட்ட அந்த பெண் காணாமல் போன வித்யா என்பது தெரியவந்ததால் வித்யா மாயமான வழக்கை மீண்டும் தூசி தட்டியது கேரள போலீஸ். கணவர் பிரேம் குமார், சுனிதா பேபி என்பவருடன் திருவனந்தபுரத்தில் வசித்து வருவதாக தகவல் அறிந்து அவர்களை பிடித்து விசாரித்தனர்.

வித்யா கொலையின் பின்னணியில் 96 படம் போல பள்ளி பருவத்தில் காதலித்து பிரிந்து, மீண்டும் இணைந்த மிடில் ஏஜ் காதல் ஜோடி ஒன்று மறைந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

வித்யா மாயமாவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு பிரேம்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து 25 வருடங்கள் கழித்து பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகின்றது. அங்கு பள்ளி பருவத்தில் தன்னிடம் நெருங்கி பழகிய சுனிதா பேபி என்பவரை சந்தித்துள்ளார் பிரேம். அந்த சிறுவயதில் பக்குவமின்றி பிரிந்த இருவரும் மணவாழ்க்கை பற்றி மனம் விட்டு பேசியுள்ளனர்.

அப்போது இருவருக்குள்ளும் மீண்டும் காதல் தீ பற்றிக் கொண்டது. இந்த மிடில் ஏஜ் ஜோடிகளின் காதல் விவகாரம் வித்யாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் குண்டாக இருக்கும் தனது மனைவியை தீர்த்து கட்டிவிட்டு ஒல்லியாக இருக்கும் தனது பள்ளி பருவ காதலியுடன் வாழ்வது என்று திட்டமிட்டுள்ளார் பிரேம் குமார். அதன்படி மனைவிக்கு உடல் எடை குறைய ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாக கூறி திருவனந்தபுரத்தில் உள்ள வில்லா ஒன்றிற்கு ஏமாற்றி அழைத்துச்சென்றுள்ளார்.

அந்த வில்லாவின் கீழ் தளத்தில் உள்ள அறையில் காதலி சுனிதா பேபி தங்கி இருக்க, மேல் தளத்தில் பிரேம் குமார் தனது மனைவியுடன் தங்கியுள்ளார். நள்ளிரவில் மனைவி வித்யாவை மருந்து என மதுவை கொடுத்து கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாக கூறப்படுகின்றது. போதையில் மயங்கிய வித்யாவை காதலி சுனிதாபேபியுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் பிரேம் என்கின்றனர் காவல்துறையினர்.

சடலத்தை காரில் ஏற்றி வந்து வள்ளியூரில் வீசிவிட்டு, வித்யாவின் செல்போனை திருவனந்தபுரத்தில் இருந்து மும்பை செல்லும் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் குப்பை தொட்டியில் வீசியுள்ளார். அந்த செல்போனை பீகாரில் எடுத்த நபர்கள் சுவிட்ச் ஆப் செய்துள்ளனர் என்கின்றனர் காவல்துறையினர்.

இந்த கொலைக்கு மூல காரணமே 96 மற்றும் திரிஷ்யம் ஆகிய திரைப்படங்கள் தான் என்று கொலையாளியே தங்களிடம் ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

96 படத்தில் பள்ளி பருவ காதலர்கள் இருவரும் பிரிந்து செல்வது போல இறுதிகாட்சி அமைக்கப்பட்டு இருக்கும்..! ஒரு வேளை இருவரும் சேர்ந்திருந்தால் என்ன மாதிரியான விபரீதமெல்லாம் அரங்கேறி இருக்கும் என்பதன் மீதி காட்சியாக அரங்கேறியிருக்கிறது இந்த கொடூர கொலை சம்பவம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments