குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு - தீவிரமடையும் போராட்டங்கள்

0 445

குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களில், போராட்டங்கள் நடைபெற்றன. அசாமில் முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, மக்களவையில்  நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், வடகிழக்கு மாணவர்கள் கூட்டமைப்பு, 12 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனால், அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி, திப்ருகார் உள்ளிட்ட இடங்களில், கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. போக்குவரத்தும் இயங்கவில்லை. இதனால், இயல்பு வாழ்க்கை  முடங்கியது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அசாம் மாணவர்கள் சங்கத்தினர், திப்ருகார் நகரின் பல்வேறு இடங்களில், டயர்களை கொளுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

திப்ருகார் நகரின் மற்றொரு பகுதியில், பெண்களும், குழந்தைகளும், போராட்டத்தில் பங்கேற்று முழக்கமிட்டனர். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அசாம்-மேகாலயா எல்லையில் அமைந்திருக்கும் ஜோராபட் என்ற பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில், சிலர், டயர்களை கொளுத்தி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

திரிபுரா மாநிலத்தின் அகர்தலா உள்ளிட்ட இடங்களிலும், குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, அசாம் மாநிலத்தில், சோனிட்பூர், லக்கிம்பூர் மாவட்டங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில், பழங்குடியின மக்களின் ஹார்பின் திருவிழாவையொட்டி, முழு அடைப்புக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில், போராட்டங்களைத் தடுக்க, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தன்னாட்சி பெற்ற அமைப்புகள் உள்ளிட்டவற்றிற்கு, ஆளுநர் விடுமுறை அறிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments