ஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ் ! ஏப்பம் விட்ட கார் ஓட்டுநருக்கு வலை

0 269

நாசிக்கில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்த விவகாரத்தில், பிரபல ஜெயச்சந்திரன்  நிறுவன உரிமையாளரின் மகனிடம் 8 லட்சம் ரூபாயை நூதனமான முறையில் மோசடி செய்த அவரது கார் ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர். 

வெங்காய விலை ஏற்றத்தை பயன்படுத்தி, பதுக்கலும், திருட்டு உள்ளிட்ட மோசடிகளும் பரவலாக நடக்கத் தொடங்கியுள்ளன. இந்த மோசடியில் இருந்து சென்னையை சேர்ந்த பிரபல ஜெயசந்திரன் நிறுவனமும் தப்பவில்லை.

சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள ஜெயச்சந்திரன் கடையில் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

வெங்காய விலை ஏற்றத்தால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 8 டன் வெங்காயத்தை ஜெயசந்திரன் கடை உரிமையாளரின் மகனான சுந்தரலிங்கம் கொள்முதல் செய்துள்ளார்.

இதற்கான தொகையாக 8 லட்சம் ரூபாயை வெங்காய மண்டி வியாபாரிகள் கணக்கில் செலுத்தும் பொறுப்பை கார் ஓட்டுநரான கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த பிரகாஷிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், வெங்காய மண்டி வியாபாரிகளின் வங்கி கணக்கு எனக் கூறி, தனது வங்கி கணக்கு எண்ணை பிரகாஷ் அளித்துள்ளார். இதையறியாத ஜெயசந்திரன் கடை நிர்வாகத்தினர், அந்த வங்கி கணக்கில் 8 லட்சத்தை செலுத்தியுள்ளனர்.

இதனிடையே, ஜெயசந்திரன் நிறுவனத்துக்கு 8 டன் வெங்காயம் அனுப்பிவிட்ட நிலையில், அதற்கான பணம் வராததால், அதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு வெங்காய மண்டி வியாபாரிகள் கேட்டுள்ளனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், கார் ஓட்டுநர் பிரகாஷ் 8 லட்சம் ரூபாயை அபேஸ் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயசந்திரன் நிறுவனம் அளித்த புகாரின்பேரில் மாம்பலம் போலீஸார் வழக்குப்பதிந்து, 8 லட்சம் ரூபாயை மோசடி செய்த பிரகாஷை வலைவீசி தேடி வருகின்றனர்.

அதேநேரத்தில், வெங்காய விலை அதிகரிப்பால், அதை இருப்பு வைக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி 2 டன்னிற்கு மேல் வெங்காயம் வாங்கி வைக்கக் கூடாது என கெடுபிடி உள்ள நிலையில், ஜெயசந்திரன் கடை நிர்வாகம் மட்டும் ஏன் 8 டன் வெங்காயம் வாங்கியது? என்ற கேள்வியும் மறுபக்கம் எழுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments