கார்த்திகை தீபத்திருவிழா: மலை மீது மாலையில் மகாதீபம்

0 255

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி,  திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவதை  தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டுள்ளனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகர் சன்னதி உள்ளிட்ட மற்ற சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது.

இன்று மாலையில் கோவின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. சரியாக மாலை 6 மணிக்கு அண்ணாமலையார்- உண்ணாமலையம்மன் சமேதராக சன்னதியில் இருந்து வெளியில் வரும் நேரத்தில் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

மகா தீபத்தை நேரில் தரிசிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலப்பாதையில் குவிந்துள்ளனர்.

ஊருக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படாத நிலையில், 10 தற்காலிக பேருந்து நிலையங்கள், மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்களில் இருந்து பக்தர்கள் நடந்தே கிரிவல பாதையை அடைகிறார்கள். 14 கிலோ மீட்டர் தொலைவுள்ள பாதையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வதாகவும், இரவு வரை மேலும் பல லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழாவையொட்டி அண்ணாமலையார் கோவில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வந்து செல்ல சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்தும், ஆந்திரா கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 2 ஆயிரத்து 615 சிறப்பு பேருந்துகளும், வெளி மாநில அரசு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

வாகன நெரிசலை தவிர்க்க ஊருக்கு வெளியே 10 தற்காலிக பேருந்து நிலையங்கள், 3 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பிற வாகனங்கள் நிறுத்தும் வகையில் 48 தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 30 க்கும் மேற்பட்ட இடங்களில் எல் ஈ டி அகன்ற திரையில் தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments