இடைத்தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி..! ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா

0 1474

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்துள்ளது. 

கர்நாடகா மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தபோது எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் தனி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதீய ஜனதா-105 தொகுதிகளில், காங்கிரஸ்-78 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம்-37 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதையடுத்து பாரதீய ஜனதா ஆட்சி அமைவதை தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கைகோர்த்தது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி முதலமைச்சர் ஆனார்.

இந்த நிலையில் குமாரசாமி ஆட்சி மீது அதிருப்தி தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து கர்நாடக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 208 ஆக குறைந்ததால் பெரும்பான்மைக்கு தேவையான 105 எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தது.

இந்த நிலையில் காலியாக அறிவிக்கப்பட்ட 17 தொகுதிகளில் பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மஸ்கி ஆகிய இரு தொகுதிகள் தொடர்பாக வழக்குகள் இருப்பதால் மற்ற 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி அத்தானி, காக்வாட், கோகாக், எல்லா புரா, ஹுரேகேரூர், ரானி பென்னூர், விஜயநகரா, சிக்பளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜி நகர், ஹொஸ்கேட், கே.ஆர்.பேட், ஹுன்சூர் ஆகிய 15 தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவில் 67.91 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இன்று காலை 8 மணிக்கு 15 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. காலை 8.30 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரியத் தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க. வேட்பாளர்கள் 12 தொகுதிகளில் முன்னிலை பெற்றனர்.

இதில் ஹுன்சூர், சிவாஜிநகர் ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஹொஸ்கேட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சரத் பசே கவுடா வெற்றி பெற்றுள்ளார். மீதமுள்ள 12 தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஏற்கனவே 105 எம்.எல்.ஏகள் உள்ள நிலையில் கூடுதலாக 12 எம்.எல்.ஏக்களை பெற்றுள்ளதன் மூலம் கர்நாடக சட்டசபையில் பா.ஜ.கவின் பலம் 117 ஆக உயர்ந்துள்ளது. 225 எம்.எல்.ஏக்களை கொண்ட இந்த சபையில் அறுதி பெரும்பான்மைக்கு 113 பேர் தேவை என்ற நிலையில், பா.ஜ.க.வின் எண்ணிக்கை 117 ஆகி உள்ளதால் எடியூரப்பா ஆட்சிக்கு அறுதி பெரும்பான்மை கிடைத்துள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, நிரந்தரமான ஆட்சி அமைய பா.ஜ.கவுக்கு மக்கள் வாக்களித்து உள்ளனர் என்றார். வெற்றி பெற்ற 12 எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்பார்கள் என்று அவர் கூறினார். இடைத் தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments